/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் குரல்... ஒலிக்குமா? பிரதான கட்சிகள் கைவிட்டதால் சிக்கல்
/
சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் குரல்... ஒலிக்குமா? பிரதான கட்சிகள் கைவிட்டதால் சிக்கல்
சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் குரல்... ஒலிக்குமா? பிரதான கட்சிகள் கைவிட்டதால் சிக்கல்
சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் குரல்... ஒலிக்குமா? பிரதான கட்சிகள் கைவிட்டதால் சிக்கல்
UPDATED : ஏப் 30, 2026 05:47 PM
ADDED : ஏப் 30, 2026 05:31 PM
புதுச்சேரி: வரலாறு காணாத அளவில் ஓட்டுப் பதிவு நடந்துள்ள சூழ்நிலையில் சட்டசபையில் பெண்களின் குரல் ஒலிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் வந்துவிட்டால் போதும், அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மகளிர் நலன் என்ற மந்திரத்தை ஓயாமல் உச்சரிக்கும். இலவச எரிவாயு, மாத உதவித்தொகை, அரசு பஸ்களில் இலவசப் பயணம் எனப் பெண்களைக் கவரப் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
பெண்களை ஓட்டு இயந்திரங்களாக மட்டும் பார்க்கும் அரசியல் கட்சிகள், அவர்களை முடிவெடுக்கும் இடத்தில் வைப்பதற்காக தேர்தலில் சீட் கொடுத்து அங்கீகரிக்கத் தயங்குகின்றன.
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் இது தான் நடந்தது. இத் தேர்தலில் மொத்தமுள்ள 294 வேட்பாளர்களில் வெறும் 40 பேர் மட்டுமே பெண்கள். இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 13.60 சதவீதம் மட்டுமே. 24 அரசியல் கட்சிகள் களம் கண்ட போதிலும், வெறும் 12 கட்சிகள் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்தன.
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 28 தொகுதிகளில் சரிபாதியாக 14 இடங்களைப் பெண்களுக்கு வழங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தது. வி.சி.க., மற்றும் அண்ணா மக்கள் கட்சி முறையே 2-ல் 1 தொகுதி மற்றும் 1-ல் 1 தொகுதி எனப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளன. போட்டியிட்டுள்ள 117 சுயேச்சை வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள் போட்டியிட்டுள்ளனர். பெரிய கட்சிகளும் பெண்களை ஓட்டுவங்கியாகப் பார்க்கின்றனவே தவிர, அவர்களைச் சட்டசபைக்கு அனுப்பத் தயங்குகின்றன. தமிழக வெற்றி கழகம் 28 தொகுதிகளில் வெறும் 2 பெண்கள் (7சதவீதம்), என்.ஆர்.காங் 16 தொகுதிகளில் 2 பெண்கள் (13 சதவீதம்). காங்கிரஸ் 21 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் (5 சதவீதம்) நிறுத்தியுள்ளனர்.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தி.மு.க, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., போன்ற முக்கியக் கட்சிகள் இந்த முறை பெண் வேட்பாளர்களையே நிறுத்தவில்லை என்பது தான். கடந்த 2021 தேர்தலில் 36 பெண்கள் போட்டியிட்டனர். அதில் என்.ஆர்.காங்., சந்திரப் பிரியங்கா வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக உள்ளது.
சுயேச்சையாகப் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் பலர் முறையாகப் பிரசாரத்திற்கே செல்லவில்லை. இதனால் இவர்களில் எத்தனை பேர் வெற்றிப் பெறுவர் என்பதே சந்தேகமாக உள்ளது.
அடுத்து வரலாறு காணாத ஓட்டுப்பதிவு நடந்துள்ள சூழலில், என்.ஆர்.காங்., காங்கிரஸ் மற்றும் த.வெ.க., நிறுத்தியுள்ள 5 பெண் வேட்பாளர்களும் கடும் போட்டியைச் சந்தித்துள்ளனர். இவர்கள் ஒருவராவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவார்களா என்பதே இப்போது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மிகப்பெரிய முரண் என்னவென்றால், வாக்காளர் எண்ணிக்கையில் பெண்களே அதிகம். பெண் வாக்காளர்கள் - 5,03,810. ஆண் வாக்காளர்கள் - 4,46,361.
ஆண்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தும், சட்டசபையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பெண் எம்.எல்.ஏ.,வைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாத சூழலுக்கு அரசியல் கட்சிகள் பெண்களைத் தள்ளியுள்ளன. பெண்களுக்குச் சீட் வழங்காததற்கு அரசியல் கட்சிகள் சொல்லும் பொதுவான காரணம் வெற்றி வாய்ப்பு, பண பலம், தசைபலம் மற்றும் சாதியக் கட்டமைப்புகள் நிறைந்த தேர்தல் களத்தில் பெண்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆனால், பெண்கள் வெற்றி பெற்று அமைச்சராகவும் திறம்படச் செயல்பட்ட வரலாறு நமக்கு உண்டு. வாய்ப்பே வழங்காமல் வெற்றி வாய்ப்பு இல்லை என்று சொல்வது ஜனநாயகப் படுகொலை. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள பெண் சக்தி, சட்டசபையில் ஒரு குரலாக கூட ஒலிக்கவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் சமநிலையைப் பாதிக்கும் என்கின்றனர் பெண்ணியவாதிகள்....
புதுச்சேரி அரசியலில் பெண்கள் எப்போதும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவே எப்போதும் இருந்து வருகின்றனர். ஆனால், வெற்றியைத் தீர்மானிப்பவர்களுக்கு வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது மே 4ல் ஓட்டு பெட்டி திறக்கப்படும்போது தெரிந்துவிடும்.

