/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர்கள் வைக்க வேண்டாமென முதல்வர் அறிவிப்பாரா?: அகற்ற முடியாமல் கையை பிசையும் அதிகாரிகள்
/
பேனர்கள் வைக்க வேண்டாமென முதல்வர் அறிவிப்பாரா?: அகற்ற முடியாமல் கையை பிசையும் அதிகாரிகள்
பேனர்கள் வைக்க வேண்டாமென முதல்வர் அறிவிப்பாரா?: அகற்ற முடியாமல் கையை பிசையும் அதிகாரிகள்
பேனர்கள் வைக்க வேண்டாமென முதல்வர் அறிவிப்பாரா?: அகற்ற முடியாமல் கையை பிசையும் அதிகாரிகள்
ADDED : நவ 12, 2024 07:27 AM
புதுச்சேரி: முதல்வர் பங்கேற்கும் கடை திறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு சகட்டுமேனிக்கு பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் முளைத்து வருகின்றது. இந்த பேனர்களை அகற்ற முடியாமல் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் அதிகரித்து வந்த பேனர் கலாசாரம், கோர்ட் தலையீட்டிற்கு பின் சற்று குறைந்தது. அனுமதியின்றி பேனர் வைப்போர் மீது போலீசாரும் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக பேனர் கலாசாரம் மீண்டும் துளிர்விடும் நிகழ்ச்சிகளாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் விழாக்கள் மாறி வருகின்றன.
முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் விழாக்களில், அவர்களை வரவேற்று சகட்டுமேனிக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேனர்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட அகற்றப்படுவதில்லை. அதிகாரிகளும், போலீசாரும் பேனரை அகற்ற முடியாமல், 'கப்சிப்' என அமைதியாகி விடுகின்றனர்.
இதனை பார்க்கும் மற்றவர்களும், அரசியல் கட்சியினரும் அடுத்தடுத்து அப்பகுதிகளில் பேனர்களை மீண்டும் வைக்க துவங்கிவிடுகின்றனர். இதன் காரணமாக மீண்டும் பேனர் கலாசாரம் அனைத்து பகுதிகளிலும் மெல்ல மெல்ல துளிர்விடுகின்றது.
பேனர் கலாசாரம் மீண்டும் துளிர்விடுவதற்கு முதல்வரே காரணம் என அனைத்து அரசியல் கட்சியினரும் கையை காட்டுகின்றனர்.
முதல்வரின் பேனரை அகற்றாமல், எங்கள் பேனர்களை அகற்ற வந்து வீட்டீர்களா? அவர்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? என வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். முதல்வர் பேனர் மீது கையை வைத்தால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமா என மிரட்டுகின்றனர்.
இதனால் நமக்கு ஏன் வீண் வம்பு என்று, முதல்வர் பங்கேற்ற கடை திறப்பு, கல்யாணம், காது குத்து நிகழ்சி பேனர்களை அகற்ற முடியாமல் அதிகாரிகளும் கையை பிசைந்து கொள்கின்றனர்.
மக்களோடு மக்களாக முதல்வர் ரங்கசாமி இருக்கின்றார். முதல்வர் ரங்கசாமியை எளிதாக அணுக முடியும் என்பதால், காது குத்தல், கல்யாணம், கடை திறப்பு என அனைத்து விழாக்களுக்கும் பொதுமக்கள் அழைப்பிதழ் வைக்கின்றனர். முதல்வரும் அனைத்து விழாக்களுக்கும் சென்று வாழ்த்திவிட்டு வருகின்றார். இந்த விழாக்களுக்கு முதல்வர் சென்று வருவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவருக்காக வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் தான் பெரும் இடையூறாக உள்ளது.
கடை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வைக்கும்போதே, பேனர் வைத்தால் அந்த விழாவிற்கு வர மாட்டேன் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தால் மட்டுமே இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கு முன் மாதிரியாக முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.