/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப கல்வியில் கவனம் செலுத்துமா அரசு?
/
ஆரம்ப கல்வியில் கவனம் செலுத்துமா அரசு?
ADDED : மே 19, 2024 04:02 AM
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் சறுக்கியுள்ள சூழ்நிலையில், ஆரம்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ள அரசு, மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு முழுவதுமாக மாறி விட்டது.
ஆனால், தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் கடைசியாக தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் சறுக்கி அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
மாநில அரசின் பாடத்திட்டத்தில் சாதிக்க முடியாத அரசு பள்ளி மாணவர்களால், கடினமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் எப்படி சாதிக்க முடியும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி உள்ளது. இதில் உண்மை இல்லாமலும் இல்லை.
தேர்வுகளில் தேர்ச்சி அடைவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களும், பெற்றோர்களும் கவலை கொள்வது கிடையாது.
எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கை பின்பற்றப்படுவது இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
எட்டாம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்று அறிவிப்பது தவறில்லை. அதில் மாணவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை கற்றல் இலக்கு இல்லாமல் இருப்பதே சிக்கலாக உள்ளது.
எழுத, படிக்கத் தெரியாத ஒரு மாணவர், பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு வரை வந்து விடுகிறார். குறைந்தபட்சம் தமிழில்கூட எழுத படிக்க தெரிவதில்லை.
இப்படி இருந்தால் எப்படி அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேபோல், எட்டாம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சதவீதம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுவது இல்லை.
எனவே, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பெற்றோரோ, பள்ளி நிர்வாகமோ கவலை கொள்வதில்லை.
இதுதான், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், அடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்விலும் எதிரொலித்து ரிசல்ட்டை சறுக்க செய்கிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமோ அல்லது மாநில பாடத்திட்டமோ அடிப்படை கல்வி தான் முக்கியம்.
எனவே, ஆரம்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதால் மட்டுமே மாற்றம் வந்துவிட முடியாது.
இதை புதுச்சேரி அரசும், பள்ளிக் கல்வி துறையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

