/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மாநில உரிமையை அரசு பலி கொடுப்பதா?'
/
'அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மாநில உரிமையை அரசு பலி கொடுப்பதா?'
'அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மாநில உரிமையை அரசு பலி கொடுப்பதா?'
'அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மாநில உரிமையை அரசு பலி கொடுப்பதா?'
ADDED : மே 11, 2024 04:52 AM
புதுச்சேரி: அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மாநில உரிமையை பலிகொடுத்து, இந்த மண்ணின் மைந்தர்களான அரசு ஊழியர்களை பழிவாங்கி இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சக உதவியாளர் நியமனத்தில் மத்திய தேர்வாணையம் ஐகோர்ட் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் புதுச்சேரி அரசு ஊழியர் மற்றும் சங்கங்கள் முன்வைக்கும் 100 சதவீத பதவி உயர்வு வழங்கும் அதிகாரத்தை புதுச்சேரி அரசுக்கே வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் புதுச்சேரி அரசோ இந்த அதிகாரம் தனக்கு வேண்டாம் என்று தீர்ப்பாயத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். இது புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு இழைக்கும் துரோகம்.
இந்த வழக்கில் மத்திய தேர்வாணையம் அனுமதி கொடுத்து மாநில அதிகாரத்தை அங்கீகரிக்கும் நிலையில் அதனை வேண்டாம் என்று தனது அதிகாரத்தை தாரைவார்க்கும் மாநில அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது.
புதுச்சேரி முதல்வரும் மாநில அந்தஸ்து வேண்டுமென்று அவ்வப்போது பேசி வருகிறார். இந்தநிலையில் இவரது அரசு இருக்கும் அதிகாரத்தை உதறித்தள்ளுவது பெரிய இழுக்கு. முதல்வருக்கு உண்மையில் மாநில உரிமை மீது அக்கறை இருந்தால் இந்த வழக்கில் புதுச்சேரி அரசின் அதிகாரத்தை நிலைநாட்டி இருக்கலாம்.
இது வெறும் அரசு ஊழியர் பிரச்னை மட்டுமல்ல. மாநில அதிகாரத்தின் முக்கிய நிலைப்பாடு. இதில் முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். இல்லை இவரை அறியாமல் அல்லது இவரை மீறி அதிகாரிகள் செய்தார்களா என்று தெரியவில்லை. அப்படி அதிகாரிகள் தன்னிச்சையாக மாநில உரிமையை பலிகொடுத்திருந்தால் அவர்கள் மீது முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில உரிமையை நிலைநாட்ட அரசு ஊழியர்களுடன் இணைந்து தி.மு.க., பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.