/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை: புதுச்சேரியில் கணவர், அண்ணி கைது
/
திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை: புதுச்சேரியில் கணவர், அண்ணி கைது
திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை: புதுச்சேரியில் கணவர், அண்ணி கைது
திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை: புதுச்சேரியில் கணவர், அண்ணி கைது
ADDED : மார் 28, 2024 04:33 AM

புதுச்சேரி : திருமணமான 2 மாதத்தில் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் மற்றும் அவரது அண்ணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகர், கல்லறை வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,57; இவரது மகள் ரம்யா,22; இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி.26; என்பவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 22ம் தேதி திருமணம் செய்துகொண்டு, சோலை நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணமான நாள் முதல் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 24ம் தேதி காலை தமிழ்மணி, பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து, 'ரம்யாவை உங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுங்கள். என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை' என கூறி உள்ளார்.
தொடர்ந்து, பன்னீர்செல்வம் தமிழ்மணி வீட்டிலிருந்த ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். மறுநாள் 25ம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த ரம்யா, தனது சகோதரி சவுமியாவிற்கு 'எனக்கு வாழ பிடிக்கவில்லை' என குறுந்தகவல் அனுப்பிவிட்டு, வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் இறப்புக்கு மருமகன் உள்ளிட்டோர் காரணம் என கூறி பன்னீர்செல்வம் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் தாசில்தார் விசாரணை நடந்தது.
தமிழ்மணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத வரை ரம்யா உடலை வாங்கமாட்டோம் என அவரது பெற்றோர் மறுத்தனர்.
இந்நிலையில், ரம்யாவை தற்கொலைக்கு துாண்டியதாக அவரது கணவர் தமிழ்மணி, சகோதரர் கார்த்திக், அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். தமிழ்மணி மற்றும் அவரது அண்ணி நிரஞ்சனா, 33; ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து, ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் நேற்று பெற்றுச் சென்றனர்.