ADDED : ஜூன் 30, 2026 06:42 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி மாநிலம், கோர்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் விஜயபாரதி, 22; புதுச்சேரி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், தனது தோழிகளான புதுச்சேரி கதிர்காமத்தை சேர்ந்த பாலமுருகன் மகள் சுபஸ்ரீ, 22; முத்திரைபாளையத்தை சேர்ந்த ஜானகிராமன் மகள் ஹரிதேவி, 22; ஆகியோருடன் நேற்று முன்தினம் மொபட்டில் புதுச்சேரியில் இருந்து வளவனுாரில் உள்ள தோழியை பார்க்க வந்தார்.
புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பக்கமேடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வோக்ஸ் வேகன் கார், மொபட் மற்றும் அதற்கு முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இதில், சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜயபாரதி, ஹரிதேவி மற்றும் பைக்கில் வந்த விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த கலைவேந்தன், 30; ஆகியோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
