ADDED : ஜூன் 26, 2026 04:10 AM
புதுச்சேரி, ஜூன் 26–
பெங்களூருவில் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, உருளையன் பேட்டை சைபர் கிரைம் போலீசார், 23ம் தேதி இரவு 9:00 மணி யளவில், புதுச்சேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும் படி நின்றிருந்த இளம் பெண்ணிடம் விசாரித்ததில், அவர் பெங்களூரு மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய ஸ்வேதா, 25, என, தெரியவந்தது.
இதுகுறித்து உருளையான்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் கூறியதாவது:
பெங்களூரு சீகேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தர், 55. இவரது மனைவி முத்துலட்சுமி, 48, மகள்கள் ஸ்வேதா, 25; சுப்ரியா, 20. ஸ்வேதாவும் கென்னத் என்பவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சீகேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாதங்களாக கணவன் மனைவியாக வசித்தனர். இந்நிலையில் கிரெடிட் கார்டு மூலம் ஸ்வேதா ரூ. 30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அடைக்க ஸ்வேதா பெற்றோரிடம், சொத்தில் தனது பங்கை கேட்டுள்ளார்.
இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், பெற்றோர் மற்றும் தங்கையை தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, ஸ்வேதா, தனது காதலனுடன் சேர்ந்து வெட்டி, கொலை செய்து விட்டு புதுச்சேரி தப்பி வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பிடித்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பெங்களூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுச்சேரி வந்த பெங்களுரு போலீசாரிடம் ஸ்வேதாவை ஒப்படைத்தனர். அவர் கொடுத்த தவலின் பேரில் அவரது காதலன் கென்னத்தை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரையும் இன்று பெங்களுரு போலீசில் ஒப்படைக்கின்றனர்.
