ADDED : ஏப் 29, 2026 08:11 PM
அரியாங்குப்பம்: கடனாக வாங்கி சென்ற காரை அடமானம் வைத்து விட்டு, தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர், 32; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மணவெளி 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 34; இருவரும் நண்பர்கள். இந்நிலையில், சுதாகருக்கு சொந்தமான காரை (பி.ஓ.05, பி.4566) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி பாலாஜி வெளியூர் செல்வதற்கு கடனாக வாங்கி சென்றார். காரை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். கார் எங்குள்ளது என சுதாகர் தேடியது போது, தட்டாஞ்சாவடியில் ஒருவர் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது.
காரை வைத்திருக்கும் நபரிடம் சுதாகர் விசாரித்த போது, பாலாஜி காரை அடமானம் வைத்து பணம் வாங்கி சென்றதாக அவர் கூறினார். அதையடுத்து, பாலாஜியை வேறு ஒரு மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு காரை ஒப்படைக்கும்படி சுதாகர் கேட்டார். காரை அடகு வைத்து விட்டேன். திருப்பி தர முடியாது எனக் கூறி, சுதாகருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, சுதாகர் புதுச்சேரி நீதிமன்றம் ஜே.எம். 3ல், கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அரியாங்குப்பம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வருகிறார்.
