ADDED : மே 29, 2026 06:02 PM
கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று காலை வாலிபர் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர், பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் மாரிமுத்து, 38; என்பதும், இவர், வேறொரு நபரிடம் டிராக்டர் வாங்கினார். இதற்கிடையே, அந்த டிராக்டரை விற்பனை செய்தவரின் உறவினரான புலியூர்காட்டுசாகையைச் சேர்ந்தவர், மாரிமுத்துவிடம் டிராக்டரை திருப்பி கேட்டுள்ளார். மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர், மாரிமுத்துவின் காரை எடுத்து சென்று விட்டார்.
காரை கொண்டு சென்ற நபர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.
உடன், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
