ADDED : செப் 06, 2026 08:04 PM
காரைக்கால்: காரைக்காலில் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம், கீழவாஞ்சூர் பஸ் நிலையம் அருகில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக திருப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கீழவாஞ்சூர் பஸ் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு பெண்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர்.
போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியை சேர்ந்த சடையன், 60, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொல்லம் அப்பலா நர்ஷா, 63; தேவி புடி, 35, மற்றும் வீரசாய் சந்தோஷ் கிரண், 27, ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. தாசில்தார் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனையில் சடையனிடம் 2 பண்டல், பொல்லம் அப்பலா நர்ஷாவிடம் ஒரு பண்டல், வீரசாய் சந்தோஷ் கிரணிடம் ஒரு பண்டல், தேவி புடியிடம் ஒரு பண்டல் என, மொத்தம் 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ 84 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, அவர்கள் நால்வரையும் கைது செய்து, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
