ADDED : ஆக 27, 2026 07:02 PM
புதுச்சேரி: மதி ஒளியின் அரிச்சுவடி பொது நுாலகத்தின் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கணித ஒலிம்பியாட் போட்டி நடந்தது.
புதுச்சேரி மூலக்குளத்தில், எழுத்தாளர் மதிஒளி சரஸ்வதி என்பவரால், மதிஒளியின் அரிச்சுவடி பொது நுாலகம் திறக்கப்பட்டது. இந்த நுாலகத்தில், குழந்தைகள், மாணவ, மாணவியர்கள் உள்பட சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நுாலகத்தில், புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் என, 18 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இந்த நுாலகத்தின், 10 ம் ஆண்டு துவக்க விழாவினை, ஓராண்டு காலம், மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சியாக, மாணவ மாணவியர்களின் கணித திறமையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 23ம் தேதி, மதிஒளியின் கணித ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், புதுச்சேரி சாய்ராம் வித்யாலயா, பிரெசிடென்சி பள்ளி, கதிர்காமம் மற்றும் முத்தரையர்பாளையம் அரசு பள்ளிகள், இளங்கோ அடிகள் அரசு பள்ளி மற்றும் மதிஒளி அரிச்சுவடி சிறார்கள் உள்பட, 50 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு விருதுகள், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
