/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் 11ம் ஆண்டு ஆராய்ச்சி தின விழா
/
ஜிப்மரில் 11ம் ஆண்டு ஆராய்ச்சி தின விழா
ADDED : மார் 09, 2026 04:09 AM

புதுச்சேரி: ஜிப்மரில் 11ம் ஆண்டு ஆராய்ச்சி தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி பேசுகையில், 'ஆராய்ச்சி உள் கட்டமைப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதில் ஜிப்மரின் தொடர் முன்னேற்றம், புதுமை, வளர்ப்பு மற்றும் தொழில் முனைவு மையம் குறித்தும், பட்டப் படிப்பு மாணவர்களுக்கான குறுகிய கால ஆராய்ச்சி விருதுகள் 22ல் இருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து பேசினார்.
முதன்மை விருந்தினர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன தலைவர் நரேந்திரகுமார் அரோரா, சுகாதார அமைப்புகள் மற்றும் பொது சுகாதார கொள்கைகளை வலுப்படுத்திட ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஜிப்மர் தலைவர் சித்ரா சர்கார் இணைய வழியாக வாழ்த்தி பேசினார்.
ரத்த நோய் மற்றும் மரபணு சிகிச்சை ஆராய்ச்சியாளர் ஆலோக் ஸ்ரீவாஸ்தவா, ஜிப்மர் ஆராய்ச்சி தினம் குறித்து பேசினார். ஆராய்ச்சி டீன் காதம்பரி, ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார். டாக்டர் ராகுல் தோதப்கர், அடிப்படை அறிவியல் சிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருதையும், டாக்டர் சிதான்ஷு கர, பொது சுகாதார சிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருதையும், டாக்டர் மனு அய்யன், சிறந்த இளம் ஆசிரியர் ஆராய்ச்சி விருதையும் பெற்றனர்.
டாக்டர்கள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, கூட்டாண்மை ஆராய்ச்சி விருதுக்காக பாராட்டப்பட்டனர். இந்த ஆண்டு முதல் முறையாக 'மருத்துவத்தில் புதுமை' என்ற புதிய அமர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்து பல ஆராய்ச்சி விளக்கங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் சுகாதார புதுமைகளில் பல்வகை துறை இணைப்பு வாய்ப்புகள் பற்றி பேசப்பட்டது.

