/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிகளை மீறிய 13 ரெஸ்டோ பார்களுக்கு... 'சீல்': கொலையை தொடர்ந்து கலால் துறை அதிரடி
/
விதிகளை மீறிய 13 ரெஸ்டோ பார்களுக்கு... 'சீல்': கொலையை தொடர்ந்து கலால் துறை அதிரடி
விதிகளை மீறிய 13 ரெஸ்டோ பார்களுக்கு... 'சீல்': கொலையை தொடர்ந்து கலால் துறை அதிரடி
விதிகளை மீறிய 13 ரெஸ்டோ பார்களுக்கு... 'சீல்': கொலையை தொடர்ந்து கலால் துறை அதிரடி
ADDED : ஆக 12, 2025 01:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், ரெஸ்டோ பாரில், சென்னை கல்லுாரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விதிகளை மீறி செயல்பட்ட 14 பார்களின் உரிமங்களை நிறுத்தி வைத்து, 13 பார்களை கலால் அதிகாரிகள் நேற்று அதிரடியாக பூட்டி 'சீல்' வைத்தனர். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சில்லரை மது விற்பனை கூடங்கள் மற்றும் பார்கள் 233 இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் இரவு 10:30 மணிவரை இயங்கி வந்தது. இந்நிலையில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றதும், சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு 212 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளித்தது. இந்த ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி இயங்கவும், மேலும், பாடலை இசைக்கவிட்டு நடனமாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
இந்த ரெஸ்டோ பார்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அரசு சுற்றுலாவை ஊக்குவிக்கவே திறக்கப்பட்டதாக கூறி வந்தது.
இந்நிலையில் ரெஸ்டோ பார்கள் அனுமதி நேரத்தை கடந்தும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேலும் காதை செவிடாக்கும் அளவிற்கு பாடல்களை இசைத்தபடி சுற்றுலா பயணிகள் நடனமாடியதால், குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கவர்னர் உத்தரவு கடந்தாண்டு இப்பிரச்னை பூதாகரமாகியதை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் ராதாகிருஷ்ணன், விதிகளை மீறி நள்ளிரவு 12 மணியை தாண்டி இயங்கும் ரெஸ்டோ பார்களின் உரிமத்தை 3 மாதம் ரத்து செய்வதோடு, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி கலால் துறை சார்பில் இரு தனிப்படை அமைத்து, இரவு நேரங்களில் ரெஸ்டோ பார்களை கண்காணித்து, விதிகளை மீறி நள்ளிரவிற்கு மேல் இயங்கிய பார்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த நடைமுறை ஓரிரு மாதங்களுக்கு பின் கிடப்பில் போடப்பட்டது.
வழக்கம் போல் ரெஸ்டோ பார்கள் நள்ளிரவை தாண்டி இயங்கி வந்தன. இந்நிலையில், புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில், கடந்த 9ம் தேதி நள்ளிரவை கடந்தும் நடந்த பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், சென்னை கல்லுாரி மாணவர், பார் ஊழியர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு, அரசே காரணம் என பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கலால் துறை அதிரடி இச்சம்பவத்தை தொடர்ந்து, கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில், கலால் தனிப்படை குழுவினர் கடந்த 10ம் தேதி, நகரில் உள்ள ரெஸ்டோ பார்களின் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பார் உள்ளிட்ட 14 பார்கள், அனுமதி நேரத்தை கடந்து இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலால் தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர், அனுமதி நேரத்தை கடந்து இயங்கி 14 ரெஸ்டோ பார்களின் உரிமைத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும், இந்த பார்களில், கொலை நடந்த பாரை தவிர்த்த மற்ற 13 பார்களுக்கு நேற்று 'சீல்' வைத்தனர். கொலை நடந்த ஓ.ஜி.எம்., ரெஸ்டோ பார், தற்போது போலீஸ் விசாரணைக்காக சீல் வைக்கப்படவில்லை.
வரவேற்பு கலால் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை, பல்வேறு அமைப்பினரும் வரவேற்றுள்ளனர். மேலும், இதேபோன்று ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து ரெஸ்டோ பார்களை கலால் அதிகாரிகள் கண்காணித்தாலோ, பல பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றனர்.