/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
16 ஆயிரம் பேருக்கு திருத்திய ஓய்வூதியம் வழங்க உத்தரவு! அரசுக்கு கூடுதலாக ரூ.110 கோடி செலவாகும்
/
16 ஆயிரம் பேருக்கு திருத்திய ஓய்வூதியம் வழங்க உத்தரவு! அரசுக்கு கூடுதலாக ரூ.110 கோடி செலவாகும்
16 ஆயிரம் பேருக்கு திருத்திய ஓய்வூதியம் வழங்க உத்தரவு! அரசுக்கு கூடுதலாக ரூ.110 கோடி செலவாகும்
16 ஆயிரம் பேருக்கு திருத்திய ஓய்வூதியம் வழங்க உத்தரவு! அரசுக்கு கூடுதலாக ரூ.110 கோடி செலவாகும்
ADDED : ஜன 20, 2024 05:56 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 16 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 110 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
புதுச்சேரி அரசு துறையில் பணிபுரிந்து கடந்த 2016ம் ஆண்டுக்கு முன், ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 7வது சம்பள குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திருத்திய ஓய்வூதிய பலனை வழங்க மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அரசு பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. ஓய்வூதியர்கள் இது சம்பந்தமாக கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
முதல்வர் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், நிதித் துறை செயலர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி திருத்தி அமைக்கப்பட்ட ஓய்வூதிய பலனை நடைமுறைப்படுத்த குறிப்பாணை வழங்கினார். இதனால் பல ஆண்டுகளாக காத்திருந்த ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்பது போல, கணக்கு கருவூலத் துறையில் போதிய பணியாளர்கள் இல்லாமல் அனைத்து முன் பணிகளும் செய்யப்படாமல் தடைப்பட்டு நின்றன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 75 மாதங்கள் திருத்திய ஓய்வூதிய தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியர்கள் கடும் விரத்தியில் இருந்தனர்.
இதனிடையே புதுச்சேரியில் திருத்திய ஓய்வூதிய தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதித் துறை சார்பு செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்திற்கு ஓய்வூதியர்களுக்கு திருத்திய ஓய்வூதிய தொகை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது 16 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திருத்திய ஓய்வூதிய தொகை அமல்படுத்தப்படாததால், எதிர்காலத்தில் எட்டாவது ஊதிய குழு பரிந்துரை அறிவிக்கப்படும்போது, அந்த பலனையும் ஓய்வூதியர்கள் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது திருத்திய ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டுள் ளதால், அந்த சிக்கலும் தீர்ந்துள்ளது.
இதன் மூலம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் 5 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதனால், புதுச் சேரி அரசுக்கு 110 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
எப்போது கிடைக்கும்
மத்திய அரசு துணை மானிய கோரிக்கையில் அனுமதி அளித்து, ஓய்வூதியர்களுக்கு திருத்திய ஓய்வூதியம் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடனடியாக ஓய்வூதியர்களுக்கு திருத்திய ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை.
மத்திய அரசு மார்ச் 15ம் தேதிக்கு பிறகு புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை ரீலிஸ் செய்கிறது. எனவே மார்ச் மாத இறுதியில் திருத்திய ஓய்வூதிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.