ADDED : ஏப் 15, 2025 04:34 AM

பாகூர்: கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 18ம் ஆண்டு லட்ச தீப திருவிழாவையொட்டி, திருகல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18ம் ஆண்டு லட்சதீப திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 7.00 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் நடந்தது. காலை 9.00 மணிக்கு தட்டு வரிசை வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து, 12.00 மணிக்கு சீதா பிராட்டி சமேத ராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை, 6.00 மணிக்கு கோவில் வளாகம் முழுவதும் 10008 விளக்குகள் ஏற்றி லட்ச தீபவிழா நடைபெற்றது. இதில், திரளான பொது மக்கள் பங்கேற்று தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 8.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரிபெருமாள் (எ) மாறன், உபயதாரர்கள் கன்னியக்கோவில் செந்தில்குமார், காட்டுக்குப்பம் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.