புதுச்சேரி கடலில் மூழ்கி ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பலி
புதுச்சேரி கடலில் மூழ்கி ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பலி
ADDED : பிப் 17, 2026 04:02 AM
கோட்டக்குப்பம்: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர வாலிபர்கள் இருவர், கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்துார், ராம் நகரை சேர்ந்த கிருஷ்ணா மகன் ஜஷ்வன், 21; காதிரி மஹபூப் பாஷா மகன் சேஷக் முகமத் சாதிக், 21; ஹயாத்கான் மகன் நவாஸ்கான், 21; சிவா மகன் ஜெயந்த், 21,ஆகிய 4 பேரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை 11:00 மணியளவில் நால்வரும் தந்திராயன்குப்பம் கடலில் குளித்தனர். அப்போது, ஜஷ்வன், ஷேக் முகமத் சாதிக் ஆகிய இருவரும் ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்த மீனவர்கள் போராடி 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது, இருவரும் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி இறக்கும் சம்பவத்தை தவிர்க்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
