ADDED : அக் 19, 2024 01:54 AM

புதுச்சேரி: காலாப்பட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே இளைஞர்கள், மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள், அரும்பார்த்தபுரம், ஜி.என்.பாளையம் சித்தானந்தம், 19; ரெட்டியார்பாளையம், பவளநகர் ரிஷிகாந்த்லிங்கம், 18, ஆகியோர் என்பதும், சின்ன காலாப்பட்டை சேர்ந்த ஆகாஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஒன்னரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா சப்ளை செய்த ஆகாைஷ போலீசார் தேடி வருகின்றனர்.