UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:17 PM

புதுச்சேரி: செட்டிப்பட்டில் ஆடுகள் திருடிய வழக்கிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெனார்த்தனன், 60; விவசாய கூலி தொழிலாளி. இவர், கொட்டகை அமைத்து 20 ஆடுகளை வளர்ந்து வருகிறார். ஆட்டு கொட்டகையில் கடந்த 6 மாதங்களாக ஆடுகள் சில குறிப்பிட்ட கால இடைவெளியில் திருடுபோயின.
கடந்த 16ம் தேதி இரவு இவரது ஆட்டு கொட்டகையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால், வீட்டில் இருந்து ஜெனார்த்தனன் வெளியே வந்து பார்த்தபோது, 3 மர்மநபர்கள் பைக்கில் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
ஜெனார்த்தனன் புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ஆடு திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர். அதில், தமிழகப் பகுதியான திருவக்கரை அடுத்த எரையூர், நெமிலி, செல்வ முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான ஜலந்தர் மகன் ஜெனிஷ்கான், 20; சென்னை, வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனி, 9வது தெருவை சேர்ந்த சுதாகர் மகன் அபிேஷக், 19; ஆகியோரை பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ரவுடியான ஜெனிஸ்கான் மீது வானுார், ஒலக்கூர், மயிலம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, கஞ்சா விற்பனை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
