/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு 2 சீட்?
/
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு 2 சீட்?
ADDED : ஆக 16, 2025 11:39 PM
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு புதுச்சேரியில் இரண்டு தொகுதி மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் அக்கட்சியினை கவலை அடைய செய்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த சட்ட சபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான என்.ஆர்.காங்., - 16, பாஜ.,- 9 அ.தி.மு.க.,-5 ஆகிய இடங்களில் போட்டியிட்டன.
இதில் என்.ஆர்.காங்., 10 இடங்கள், பாஜ., 5 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி அமைச்சரவை இருந்து வருகிறது. கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தேர்தலில் தோல்வியை தழுவாமல் இருந்திருந்தால் கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.க.,விற்கு கண்டிப்பாக முக்கிய பதவி கிடைத்திருக்கும். இதனால் நீண்ட காலம் ஆட்சி பதவிகளில் அமராமல் இருக்கும் அ.தி.மு.க.,வினருக்கு தெம்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன காரணம என்று அறிய முடியாமல் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாமல் புதுச்சேரி அ.தி.மு.க., தனிமைப்பட்டு நிற்கிறது.
ஐந்து தொகுதிகளிலும் ஏற்பட்ட படு தோல்விக்கு பாஜ.வுடன் போட்டியிட்டதே காரணம் என்று அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது உள்ள என். ஆர். காங். பாஜ. அ.தி.மு.க. இணைந்து மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த முறை என். ஆர். காங்.கிற்கு வழங்கப்பட்ட 16 தொகுதிகளை மீண்டும் முதல்வர் ரங்கசாமிக்கு மனம் கோணாமல் வழங்கி விடுவது. பாஜ., 12 தொகுதிகளை எடுத்துக்கொள்வது அ.தி.மு.க.,விற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவது.
அதில் ஒன்று உப்பளம் மற்றொன்று காரைக்கால் என்று இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவது என்ற முடிவினை மத்தியில் உள்ள பாஜ. தலைமை எடுத்துள்ளதாக புதுச்சேரி பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஐந்து தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை தான் என்று குறிப்பிடுகின்றனர்.
இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தால் அ.தி.மு.க.,வின் எதிர்காலம் என்னாவது.
அதனால் கூடுதல் தொகுதிகளை தேர்தல் நேரத்தில் கேட்டு பெறுவோம் என, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். என்ன நடக்கும் என்பது அப்போது தெரியும்.