/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரை சுற்றியுள்ள மேலும் 20 கிராமங்கள் தத்தளிப்பு: 2ம் நாளாக வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
/
பாகூரை சுற்றியுள்ள மேலும் 20 கிராமங்கள் தத்தளிப்பு: 2ம் நாளாக வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
பாகூரை சுற்றியுள்ள மேலும் 20 கிராமங்கள் தத்தளிப்பு: 2ம் நாளாக வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
பாகூரை சுற்றியுள்ள மேலும் 20 கிராமங்கள் தத்தளிப்பு: 2ம் நாளாக வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
ADDED : டிச 04, 2024 05:32 AM
பாகூர்: தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டாம் நாளான நேற்று மேலும், 20 கிராமங்கள் வெள்ளக்காடானது.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு, தமிழக பகுதியான அழகியநத்தம், தென்பெண்ணை ஆற்றங்கரை வழியாக வெள்ள நீர் நேற்று முன்தினம் புதுச்சேரி பகுதியான பாகூர் கிராமத்திற்குள் புகுந்தது .
இதனால், இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், சோரியாங்குப்பம், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இக்கிராமங்களில் இருந்த 4,000 மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்கள் கடந்த 3 நாட்களாக மின்சாரம், குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தற்போது, தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் வெள்ள நீரின் அளவு 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடியில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி 30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள நீரின் வேகம் குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல கிராமங்களில் நேற்று 2வது நாளாக தொடர்ந்து வெள்ளம் புகுந்தது.
சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்த வெள்ள நீர், பங்காரு வாய்க்கால் வழியாக வடிந்து வருகிறது. பாகூர் ஏரி நிரம்பிய நிலையில், அந்த தண்ணீர் முழுதும் கலிங்குங்கள் வழியாக வெளியேறி வருகிறது. இதனால், அரங்கனுார் வெள்ள வாரி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், சேலியமேடு, அரங்கனுார், குமாரமங்கலம், மேலழிஞ்சிப்பட்டு, முள்ளோடை, பரிக்கல்பட்டு, மதிகிருஷ்ணாபுரம், கன்னியக்கோயில், கொரவள்ளிமேடு உள்ளிட்ட 20 கிராமங்களில் குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் புகுந்துள்ளது.
அரங்கனுார் வெள்ள வாரி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாகூர் - கரிக்கலாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனிடையே, தென்பெண்ணையாற்று நீருடன், மலட்டாற்றில் பெருக்கெடுத்த வெள்ள நீரும் சேர்ந்து டி.என்.பாளையம், கரிக்கன்நகர், ரெட்டிச்சாவடி பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளில் புகுந்துள்ளது.
புதுச்சேரி - கடலுார் முள்ளோடை, கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட சந்திப்புகளில் வெள்ளம் சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து தடைப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக தவளக்குப்பம் - கடலுார் வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
தவளக்குப்பம் - மடுகரை சாலையில் தேடுவார்நத்தம் சந்திப்பிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால், அவ்வழியாக வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டதால், புதுச்சேரி - கடலுார் இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை திட்டத்தால், வெள்ளம் வெளியேறும் இயற்கையான நீர் போக்கு பாதைகள் அனைத்தும் தடைப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.