/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 20, 2025 12:19 AM

திருக்கனுார்: பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் படுகை யணை அமைக்கும் பணியினை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி, செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பி ரெஞ்சு ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட படுகை அணையில் தேங்கும் தண்ணீரால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் சேதமடைந்தது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்காமல், தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கினர். இதனால், கடந்த 2021ம் ஆண்டு நவ., 20ம் தேதி பெய்த கன மழை மற்றும் வீடூர் அணை திறப்பால், சேதமடைந்து இருந்த அணையின் நடுப்பகுதி முற்றிலும் உடைந்து, பல்லாயிரம் கன அடி நீர் வெளியேறியது.
இதையடுத்து, படுகை அணையின் உடைந்த பகுதி இதுவரையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், எப்போதும் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கும் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை, கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் தேங்க வழியின்றி வறண்டு காணப்படுகிறது.
இதற்கிடையே, செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சேதமடைந்த படுகையணையை சீரமைக்க முடியாததால், அதன் அருகே வடக்குப் புறமாக 100 மீட்டர் இடைவெளியில் பொதுப் பணித்துறை மூலம் புதிதாக படுகையணை அமைக்க இருமுறை டெண்டர் கோரப்பட்டது. ஆனால், 2 முறையும் பல்வேறு காரணங்களால் ரத்தானது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கடந்த 2024ம் ஆண்டு அக்., 3ம் தேதி செல்லிப்பட்டு - பிள்ளையார் குப்பம் இடையே மீண்டும் படுகை அணை அமைக்க, தொகை உயர்த்தப்பட்டு ரூ.30 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் கோரி ஓராண்டாகிய போதிலும், படுகையணை அமைப்பதற்கான எவ்வித பணியும் இதுவரையில் துவங்கப்படவில்லை.
தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்கி இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும், படுகையணையில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக வெளியேறி வருகிறது.
ஆகையால், அரசு உடனடியாக புதிதாக படுகையணை அமைக்கும் பணியினை விரைவில் துவங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.