ADDED : ஏப் 18, 2026 05:02 PM
புதுச்சேரி: தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் 200 கிலோ காப்பர் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த தேத்தாம்பாக்கம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணைமின் நிலையம் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணை மின் நிலைய வளாகத்தில் கடந்த 15ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் அப்பகுதியில் இருந்த மின் விளக்குகளை அணைத்துவிட்டு அங்கு பழுதாகி சர்வீஸ் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து துணை மின் நிலைய உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிகுப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு காப்பர் கம்பிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
