/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர் மோர் பந்தலுக்கு தீ வைத்த 3 பேர் கைது
/
நீர் மோர் பந்தலுக்கு தீ வைத்த 3 பேர் கைது
ADDED : மே 17, 2025 12:26 AM

திருபுவனை: மதகடிப்பட்டில் நீர் மோர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மதகடிப்பட்டு, மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு, 15ம் தேதி தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.எ., திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 15ம் தேதி அதிகாலை மர்ம ஆசாமிகள் நீர் மோர் பந்தலை தீ வைத்து எரித்தனர்.
இதனைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
புகாரின்பேரில் திருபுனவனை போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நீர் மோர் பந்தலுக்கு தீ வைத்தது மதகடிப்பட்டு, மேட்டுத் தெரு வின்னரசன் 37; கலிதீர்த்தாள்குப்பம், எல்லைக்கல் வீதி நாகராஜூ, 37; அதே பகுதியில் ஒட்டல் நடத்தி வரும் நாகேந்திரராஜன் 55; ஆகியோர் என, தெரிய வந்தது.
அவர்கள் மூன்று பேரையும் திருபுவனை போலீசார் கைது செய்து, நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.