பைக் திருடர்கள் 3 பேர் கைது: புதுச்சேரியில் 8 பைக்குகள் பறிமுதல்
பைக் திருடர்கள் 3 பேர் கைது: புதுச்சேரியில் 8 பைக்குகள் பறிமுதல்
UPDATED : ஜூன் 28, 2026 09:34 PM
ADDED : ஜூன் 28, 2026 09:11 PM
வில்லியனுார்: புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் பெருகி வரும் வாகன திருட்டை தடுக்கும் வகையில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், வடக்கு எஸ்.பி., வம்சிதரரெட்டி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மேற்பார்வையிலான தனிப்படையினர், ஜூன் 27 மாலை துத்திப்பட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தொண்டமாநத்தத்தில் இருந்து துத்திப்பட்டு நோக்கி ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில் புதுச்சேரி டி.ஆர் நகர், முருகன் கோவில் தெரு பாலகிருஷ்ணன் மகன் பாபு (எ) ஆனந்தபாபு,39; கூடப்பாக்கம் புதுநகர் நடுத்தெரு ராஜேந்திரன் மகன் பாலமுருகன்,40; மற்றும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் முருங்கைப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெரு செல்வமணி மகன் வெங்கடேசன்,23; என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் உள்ள மதுபானக் கடை முன் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
மூவரும் சொகுசு வாழ்க்கைக்காக புதுச்சேரி, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலம், ஆரோவில், கண்டமங்கலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடி விற்று வந்தது தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், இவர்கள் மைலம், ஆரோவில், கண்டமங்கலம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் பல இடங்களில் திருடி பதுக்கி வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பைக் திருட்டு ஆசாமிகளை பிடித்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி., உள்ளிட்டோர் பாராட்டினர்.
