ADDED : அக் 21, 2024 05:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி, காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, அதன் மீது இரும்பு கம்பி வேலி பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின் மீது பொருத்தப்பட்டிருந்த 10 அடி நீள கம்பி வேலியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக பல்கலைக்கழக ஏ.எஸ்.ஓ., மோகன்ராஜ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா மேற்பார்வையில், காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த சசிக்குமார், 35; என்பவர் கம்பி வேலியை திருடி மினி வேனில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சசிக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர் திருடிச் சென்ற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கம்பி வேலி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மினி வேனை பறிமுதல் செய்தனர்.
மேலும், சசிக்குமாருக்கு உடந்தையாக இருந்த ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் பிரதான், 30; ஸ்வாதின் ஜெனா, 22, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

