பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலையில் திருப்பம் பாசக்கார மகன் உட்பட 3 பேர் கைது
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலையில் திருப்பம் பாசக்கார மகன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2026 02:26 AM

புதுச்சேரி: இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த பாசக்கார மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, பாகூரை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 50; சேதராப்பட்டில், பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவர், மனைவியை பிரிந்து தாய் மற்றும் மகனுடன் அய்யங்குட்டிப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இரவு பெட்ரோல் பங்க்கில் இருந்து பைக்கில், வீட்டிற்கு புறப்பட்டார். ஊசுடு ஏரி அருகே வந்தபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்கு அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், எவ்வித துப்பும் கிடைக்காததால், விசாரணை முடங்கியது.
இதனை அறிந்த டி.ஜி.பி. , ஷாலினி சிங், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி கடந்தாண்டு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தபோது, புருேஷாத்தமனை கொலை செய்த இருவரின் அடையாளம் தெரிந்தது.
அவர்கள், அரும்பார்த்தபுரம் தக்கக்குட்டை பகுதியை சேர்ந்த கலைவேந்தன் 33, பிரசாந்த், 32, இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் புருேஷாத்தமன் மகன் தனப்பிரவீன் கூறியதன் பேரில் கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அதையடுத்து, முதலியோர்பேட்டையில் வசித்து வந்த தனப்பிரவீனை, 29, நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரித்தனர். தனப்பிரவீன் பி.டெக்., பட்டதாரி என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் தனபிரவீன் கூறியதாவது:
தனது தந்தை என் மீது பாசமாக இருந்தார். எங்கள் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் எனது தந்தை 2வது திருமணம் செய்ய தாயரானார். அவர், 2வது திருமணம் செய்து கொண்டால் என், மீது பாசம் குறைந்து விடும் என என்னினேன். அதற்காக தந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதுகுறித்து, ஆரோவில்லில் உள்ள ஒரு ஓட்டலில் என்னுடன் வேலை செய்து வந்த நண்பர்களான கலைவேந்தன், பிரசாந்த் ஆகியோரிடம் தெரிவித்தேன்.
தந்தையை கொலை செய்யுமாறு அவர்களிடம் ரூ. 90 ஆயிரம் அட்வான்சாக கொடுத்தேன். அதன்படி அவரை ஒரு மாதமாக கண்காணித்து வந்தோம். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி இரவு கொலை செய்தோம்' என்றார்.
அதையடுத்து போலீசார் தனபிரவீன் உட்பட மூவர் மீதும் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
