ADDED : டிச 23, 2024 04:20 AM
புதுச்சேரி : டெம்போவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 சவரன் செயின் பறித்த அடையாளம் தெரியாத 4 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணரப்பேட்டை, கஸ்துாரிபாய் வீதியைச் சேர்ந்தவர் அமலா, 50; ஆம்பூர் சாலையில் உள்ள கைவினை பொருட்கள் செய்யும் மையத்தின் பயிற்சியாளர். கடந்த நவ., 27ம் தேதி வேலைக்கு சென்று மாலை டெம்போவில் வீடு திரும்பினார்.
அமலா பயணித்த டெம்போவில், புஸ்சி வீதி சந்திப்பு பழைய சட்டக்கல்லுாரி அருகே 4 பெண்கள் 2வயது குழந்தையுடன் ஏறினர். டெம்போவில் கூட்டம் அதிகம் இருந்ததால், குழந்தையை அமலாவிடம் கொடுத்தனர்.
அப்போது, கிழே பணம் கிடப்பதாக கூறினர். அமலா கிழே குனிந்து தேடியபோது பணம் ஏதும் கிடைக்கவில்லை. 4 பெண்களும் கடலுார் சாலை சந்திப்பு அருகே இறங்கி விட்டனர். வீட்டிற்கு சென்ற அமலா உடைகளை மாற்றும்போது, கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
டெம்போவில் ஏறிய 4 பெண்கள் கூட்டாக சேர்ந்து செயினை பறித்து சென்றதாக உருளையன்பேட்டை போலீசில் நேற்று முன்தினம் அமலா புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
