/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தாசில்தார் போட்டித் தேர்வு 37,000 பேர் எழுதுகின்றனர்
/
துணை தாசில்தார் போட்டித் தேர்வு 37,000 பேர் எழுதுகின்றனர்
துணை தாசில்தார் போட்டித் தேர்வு 37,000 பேர் எழுதுகின்றனர்
துணை தாசில்தார் போட்டித் தேர்வு 37,000 பேர் எழுதுகின்றனர்
ADDED : ஆக 29, 2025 03:16 AM
புதுச்சேரி: துணை தாசில்தார் போட்டித் தேர்வினை 37 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில் இதுவரை 24 ஆயிரம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு கடந்த மே 5ம் தேதி விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மே மாதம் 28ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. இதில் மொத்தம் 37,349 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நேற்று மதியம் 3:00 மணி வரை 24,388 பேர் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவர்களுக்கான போட்டித் தேர்வு வரும் 31ம் தேதி இரண்டு அமர்வுகளாக நடக்கிறது.
காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை முதல் அமர்வும், மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை இரண்டாம் அமர்வு போட்டி தேர்வு நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை 9:30 மணி வரை ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் காலை 9:30 மணி மற்றும் மதியம் 2:00 மணிக்கு மூடப்படும்.
தேர்வு நடக்கும் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள தேர்வு மையங்களிலும் மொபைல் இணைய சேவையை தடுப்பதற்காக ஜாமர் கருவி அமைக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்படுகின்றன. தேர்வர்களுக்கு உடல் சோதனை, பையோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தங்களது அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முறைகேடுகளில் ஈடுப்பட்டால் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதுடன், எதிர்கால போட்டி தேர்வுகள் எழுத தகுதி நீக்கப்படுவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.