ADDED : மார் 18, 2026 04:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும் 38 மத்தியப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, பொதுப் பார்வையாளர்களாக 17 பேர், செலவினக் கண்காணிப்பாளர்கள் 17 பேர், காவல் பார்வையாளர்கள் 4 பேர் என, மொத்தம் 38 அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர்.நியமிக்கப்பட்ட அனைத்து பார்வையாளர்களும் இன்று (18ம் தேதி ) புதுச்சேரியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணியில் அமர வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பார்வையாளர்கள் புதுச்சேரி வந்தடைந்தவுடன் தங்களது தொடர்பு விவரங்களைப் பொதுவெளியில் அறிவிப்பார்கள்.
வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் தங்களின் தேர்தல் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கப் பார்வையாளர்களைத் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நேரில் சந்தித்துப் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
