தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கு 4 பேரை காவலில் எடுத்து விசாரணை
தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கு 4 பேரை காவலில் எடுத்து விசாரணை
ADDED : அக் 14, 2026 12:02 AM
புதுச்சேரி: தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேைஷ தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், 8 சதவீத கமிஷன், மூன்று மணி நேரத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியது. இதை நம்பிய வெங்கடேஷ், நண்பர் மகேஷூடன் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ரூ.2 கோடியை கடந்த மாதம் 29ம் தேதி டி.ஆர்.நகரில் வைத்து பார்த்தசாரதி, முகமது ரபீக் கொடுத்தார். அப்போது அங்கிருந்த சிலர் பணம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பினர். அதில் சிலரை மடக்கி பிடித்து, பணத்தை சரிபார்த்த போது, ரூ.88 லட்சம் பறித்து செல்லப்பட்டது தெரியவந்தது.
புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்து, ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ.49 லட்சத்துடன் தப்பியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தனர். இதில், பணத்தை எடுத்துச் சென்ற கோபாலன்கடை வடிவேல், மகன் தினேஷ்குமார் என்கிற ஸ்டாலின்,30; பணத்தை வைத்திருந்த புதுச்சேரி பெரியார் நகர் தவமணி மகன் சிகாமணி,36 ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் ராவ், சென்னை ராமாபுரம் முகமது ரபீக்,42; பெங்களூரு ஹக்கிம் என்கிற கைலாஷ்,56;விருகம்பாக்கம் தேவராஜ் என்கிற வில்சன்,44, ஜி.என்.பாளையம் முத்து என்கிற முத்துகிருஷ்ணன்,51. ஆகியோரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
