புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு 445 பேர் மனு தாக்கல்
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு 445 பேர் மனு தாக்கல்
ADDED : மார் 23, 2026 10:26 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மொத்தம் 445 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தல் வரும் ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. மறுநாளான 16ம் தேதி முதல் மனுக்கள் பெறப்பட்டது. அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், கடந்த 21ம் தேதிவரை மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு 119 பேர் 135 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், மனு தாக்கலுக்கு இறுதிநாளான நேற்று அனைத்து அரசியல் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மனு தாக்கல் செய்தனர்.
தொகுதி தேர்தல் அலுவலர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், 'டோக்கன்' முறையை பின்பற்றி, மாலை 3 மணிக்குள் வந்த அனைத்து வேட்பாளர்களின் மனுக்களும் பெறப்பட்டது. அதில் நேற்று ஒரே நாளில் 326 பேர் 380 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இதன் மூலம், மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் மொத்தம் 445 பேர் 515 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்கள் வாபஸ் பெற நாளை மறுநாள் 26ம் தேதி மாலை 3 மணி இறுதி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
