45 அடி சாலையில் 4வது முறையாக பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி: போக்குவரத்து பாதிப்பு
45 அடி சாலையில் 4வது முறையாக பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 18, 2026 10:57 PM

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர், 45 அடி சாலையில் நேற்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி நகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக 45 அடி சாலை உள்ளது. தற்போது காமராஜ் சாலையில் உப்பனாறு மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், பெரும்பாலான வாகனங்கள் இச் சாலையைத் தான் மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் இச்சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், நேற்று காலை சாலையின் நடுவே திடீரென 5 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளம் ஏற்பட்ட இடத்தில் விபத்துகள் நடக்காமல் இருக்க, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்தப் பள்ளத்தில் மரக்கிளைகளை நட்டு, தற்காலிகமாகத் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் 45 அடி சாலையில் நேற்று பரபரப்பு நிலவியது.
இதே சாலையில் கடந்த சில மாதங்களில் இதுபோன்று பள்ளம் ஏற்படுவது இது நான்காவது முறையாகும். பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் கசிவு அல்லது மண்ணின் உறுதித்தன்மை குறைவே இதற்குப் பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது காமராஜ் சாலை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சாலையையும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் பேட்ச் ஒர்க் மட்டும் செய்யாமல், இந்தச் சாலை உள்வாங்குவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
