வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 840 கிராம் வெள்ளி நாணயம் பறிமுதல்
வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 840 கிராம் வெள்ளி நாணயம் பறிமுதல்
ADDED : ஏப் 08, 2026 06:54 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தனியார் கம்பெனியில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிராம் வெள்ளி நாணயங்கள், ரூ. 64 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் முத்தியால்பேட்டை, வேட்பாளர் ஒருவர் சார்பாக வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான பறக்கும் படையினர் விரைந்து வந்து, தனியார் கம்பெனியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேட்பாளர் உருவப்படத்துடன் பிளாஸ்டிக் பெட்டிகளில் 840 கிராம் மதிப்பிலான 1,400 வெள்ளி நாணயம், ரூ. 64 ஆயிரத்து 216 ரொக்கம், 85 டி-ஷர்ட்கள், 599 டோக்கன்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெள்ளி நாணயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கம்பெனி மேலாளர் ராஜா மீது டி நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், டி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், தனியார் கம்பெனி மேலாளர் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
