/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னரின் செயலராக மணிகண்டன் நியமனம்
/
9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னரின் செயலராக மணிகண்டன் நியமனம்
9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னரின் செயலராக மணிகண்டன் நியமனம்
9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னரின் செயலராக மணிகண்டன் நியமனம்
ADDED : பிப் 04, 2025 05:59 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னரின் செயலராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனியர் அரசு செயலரான தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில், வணிகம், வனம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு செயலர் முத்தம்மா பதவி உயர்வு பெற்று, வளர்ச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திட்டம் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின் துறை, குடிமை பொருள் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன், கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுற்றுலா, மீன் வளத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் அரசு செயலராக இருந்த நெடுஞ்செழியன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேளாண், கால்நடை, இந்து சமய அறநிலைய துறை, கலை பண்பாட்டு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுந்தரேசன், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த செப்டம்பரில் மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்தாண்டு அக்.4ல் புதுச்சேரியில் பணியில் சேர்ந்தார். ஆனால், நான்கு மாதம் கடந்தும் அவருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவருக்கு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, பொருளாதாரம், புள்ளியியல், விளையாட்டு இளைஞர் நலத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பான்கேர் சேர்மனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு செயலர் ஜெயந்தகுமார் ரேவுக்கு, சுகாதாரம், தொழிலாளர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, கூட்டுறவு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி, திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குநராகவும் பணிகளை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செயலர் கேசவனுக்கு, பொது நிர்வாகம், நிர்வாக சீர்த்திருத்த துறை, நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, விஜிலென்ஸ், செய்தி விளம்பர துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர் உள்துறை சிறப்பு செயலராகவும் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செயலர்: புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் டி.ஆர்.டி.ஏ., சேர்மானாக நியமிக்கப்பட்டு, அவருக்கு கிராமப்புற மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் வருவாய் துறை சிறப்பு செயலராகவும் பணியை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கலெக்டர்: 2021 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், புதுச்சேரி தெற்கு சப் கலெக்டருமான சோமசேகர் அப்பாராவ், காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி, தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.