
மழலையர் வண்ண தினம்
மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையருக்கான வண்ண தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியை சாவித்திரி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிறத்தில் உடை அணிந்தும், பல்வேறு வகை பொருட்களை அதே நிறத்தில் சேகரித்தும் பங்கேற்றனர்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு வண்ணங்கள் கொண்ட குபேர பொம்மை உண்டியல் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கலைவாணி, நாகம்மா, சித்ரா, கிரிஜா, சத்யா, சரோஜா கலந்து கொண்டனர்.
நாட்டு நலப்பணித் திட்ட தினம்
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைபர் கிரைம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெய்வகுமாரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
அறிவியல் கண்காட்சி
ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' தலைப்பில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியினை, பள்ளி துணை முதல்வர் சித்ரா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் 250 படைப்புகள் காட்சிப் படுத்தியிருந்தனர்.
ஓய்வு பெற்ற மாநில பயிற்சி மையத்தின் அலுவலர் கிருஷ்ணன், துணை முதல்வர் ஆல்பர்ட் டொமினிக் ராயன், கணித விரிவுரையாளர் நித்தியானந்தன் ஆகியோர் மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளைப் பள்ளி பொறுப்பாசிரியர் சந்திரா, தலைமை ஆசிரியை கீதா ஆகியோர் செய்திருந்தனர்.
விழிப்புணர்வு ஓவியப் போட்டி
காரைக்கால் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒவியம் வரைந்தனர்.
காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்வச்சதா ஹி சேவா 2024 துாய்மை இயக்கத்தின் ஒருபகுதியாக நகராட்சி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சுற்றுபுற துாய்மை குறித்து ஓவியப்போட்டி நடந்தது.
இதில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் 125பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவிய வரைந்தனர். இதில் சிறந்த ஓவியங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் முல்லைநகர், முருகராம் நகர், சங்குமண்டபம், கடல்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஓவியம் வழப்பட்டது.
கிராம சபை கூட்டம்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 11 கிராம பஞ்சாயத்துகளில் வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உள்ளாட்சித்துறையின் அறிவுறுத்தலின்படி, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 11 கிராம பஞ்சாயத்துகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில், அந்தந்த கிராம பஞ்சாயத்தை சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பயிற்சிப்பட்டறை
ராஜிவ்காந்தி அரசு கலை கல்லூரியில் ஐ.கியூ.ஏ.சி. மகளிர் பிரிவு மற்றும் டி.ஒ.சி.எல்., இணைந்து பெண்கள் தலைமையில் பெண்கள் எனும் நோக்கில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது.
நிறைவு விழாவில், கல்லுாரி (பொறுப்பு) முதலவர் ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். டி.ஒ.சி.எல்., குழும இணை இயக்குநர் யுவயாழினி ஒருங்கிணைப்பாளர்கள் லோகிதா, மணிமொழி, கலைவாணி, வைஷாலி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
முதல் நாள் நடந்த பயிற்சி விழாவில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், கீர்த்தி, மாணவிகளுக்கு தற்காப்பு மற்றும் ஆளுமைப் பண்புகளை பற்றி விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில், கல்லூரி உதவிப் பேராசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அருளரசி நன்றி கூறினார்.