ADDED : மே 25, 2026 05:43 AM

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் எதிரே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக ரூ. 2.4 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமாக விளங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினசரி வெளிநோயாளி பிரிவுக்கு மட்டுமே 5,000க்கும் மேற்பட்டோர் குவிகின்றனர்.
இதுமட்டுமன்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இதர தென் மாநிலங்களில் இருந்தும் உயர் சிகிச்சைக்காக ஏராளமானோர் ஜிப்மரை நாடுகின்றனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனையின் நுழைவாயில் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் கோரிமேடு பிரதான சாலையைக் கடப்பது, இங்கு வரும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கும் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இங்கு பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
அதிகரித்து வரும் மக்கள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடை மேம்பாலப் பணியைத் கையில் எடுத்து விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இரும்பு கட்டமைப்பைக் கொண்டு மிகவும் உறுதியான முறையில் 31 மீட்டர் நீளத்திற்கு இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்காக, பாலத்தின் இரு பக்கங்களிலும் அதிநவீன லிப்ட் வசதி செய்யப்படவுள்ளது. சாலையின் ஒரு பக்கத்தில் உள்ள லிப்ட் அல்லது படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறி, பாலத்தின் வழியே சாலையைக் கடந்து, மறுபுறம் உள்ள லிப்ட் மூலம் பாதுகாப்பாகக் கீழே இறங்கிவிடலாம்.
இதுவரை 75 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பாலம் திறக்கப்படும் போது, ஜிப்மர் பகுதி போக்குவரத்து நெரிசலின்றி மாறுவதுடன், நோயாளிகளின் பாதுகாப்பான பயணமும் உறுதியாகும்.
