/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காண்போரை கவர்ந்து இழுக்கும் கிரேக்க பயண தேவதை சிலை
/
காண்போரை கவர்ந்து இழுக்கும் கிரேக்க பயண தேவதை சிலை
காண்போரை கவர்ந்து இழுக்கும் கிரேக்க பயண தேவதை சிலை
காண்போரை கவர்ந்து இழுக்கும் கிரேக்க பயண தேவதை சிலை
ADDED : டிச 22, 2024 08:00 AM

புதுச்சேரி ரயில் நிலையத்தின் கிரேக்க டோரிக்கலை துாண்களுடைய பிரமாண்டமான முகப்பு மண்டபம் எதிரே உள்ள சிறிய பூங்காவில் விளக்கொன்றை கையில் ஏந்தி வீற்றிருப்பது கிரேக்க பயண தேவதை சிலை.
புன்னகை பூத்த முகம், நிலத்தை நோக்கிய கவிழ்ந்த தலை, கருணை சொரியும் கண்கள் என இந்த வெண்ணிற தேவதை காண்போரை கவர்ந்து இழுக்க கூடியவள். சிற்பி மித்துயிரின் மொரோ வடிமைப்பில் பிரான்சில் வசல் தொஸ்னே வார்ப்பகத்தில் உருவாக்கப்பட்டு, புதுச்சேரியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
இது இரும்பிலான சிலை. பயண தேவதையாக பிரபலமாகிவிட்ட இச்சிலையை எகிப்து தேவதை ழான் தெலோஷ் என்ற ஒரு கருத்தும் உண்டு.
ஆனால் உண்மையில் புதுச்சேரிக்கு முத்திரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வந்து பல்வேறு இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது. அப்படி 1863ல் மேற்கு புல்வார் சாலையில் தண்ணீர் தொட்டி அருகில் விளக்கு துாணும், அதன் அருகே ஒரு குடையின் கீழ் இந்த சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
அதன் பிறகு 1965ல் தற்போதைய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சிலைக்கு கீழே பீடத்தில் பாம்பு, செடி, சிங்கம்போல் தோன்றும் கொம்பு மனிதன் ஆகியவை சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
கிரேக்க அரசிகள் அணியும் அதே அழகிய அங்கி, தலை முக்காடு பின்னர் சரிய, தோளின் இரு பக்கங்களிலும், தலைமுக்காட்டின் பட்டை முன்வர, வலது கால் சற்று முன்னும், இடது கால் சற்று பின்னும் ஒன்றி நிற்க இருகைகளிலும் விளக்கு ஏந்தி ஒயிலாக நிற்கின்றாள் இத்தேவதை.
பிறை நெற்றியில் சிறுபாம்பு படமெடுக்க, காதுகளில் சிறுபாம்புகள் தொங்க அழகே உருவான பயண தேவதையின் அங்கிபட்டைகளில் ரோமன் எழுத்துகள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன.
அத்தேவதை நிற்கும் பீடத்தின் எதிரெதிர் பக்கங்களில் கொம்புகளுடைய சீறும் சிங்க முகங்களும், மற்ற இரு பக்கங்களிலும் சோலை கதிர்கள் படர்ந்திருக்க, சோலை பயிர் வேர்களின் ஊடே தவளையை கவ்வி கொண்டி இருக்கின்ற பாம்புகள் என பயண தேவதை சுற்றிலும் இயற்கை காட்சிகள் மிளிருகின்றன.
ஆனால், புதுச்சேரியின் அடையாளங்களின் ஒன்றாக மாறிபோன, பயண தேவதை, இன்றைக்கு பரிதாபமான நிலையில் உள்ளாள். போதிய பராமரிப்பு இல்லாமல், புதருக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாள். பயண தேவதைக்கு புதரில் இருந்து விடுதலை கிடைக்குமா....