/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசியலில் உருவானது புதிய... சூறாவளி; லாட்டரி அதிபர் வருகையால் கட்சிகள் கலக்கம்
/
புதுச்சேரி அரசியலில் உருவானது புதிய... சூறாவளி; லாட்டரி அதிபர் வருகையால் கட்சிகள் கலக்கம்
புதுச்சேரி அரசியலில் உருவானது புதிய... சூறாவளி; லாட்டரி அதிபர் வருகையால் கட்சிகள் கலக்கம்
புதுச்சேரி அரசியலில் உருவானது புதிய... சூறாவளி; லாட்டரி அதிபர் வருகையால் கட்சிகள் கலக்கம்
ADDED : நவ 25, 2024 04:50 AM

புதுச்சேரி : லாட்டரி அதிபரின் வருகையால், புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ள சூறாவளி பிரதான கட்சிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல், கட்சிகளை அடிப்படையாக கொண்டது என்றாலும், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசியல் சற்று வித்தயாசமானது. இங்கு கட்சிகளின் செல்வாக்கை காட்டிலும், தனிநபர் செல்வாக்கே பிரதானம்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., 10 தொகுதிகளிலும், பா.ஜ., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அதில், மொத்தமுள்ள 5 அமைச்சர் பதவியை என்.ஆர்.காங்., கட்சிக்கு 3, பா.ஜ.,விற்கு 2ம், சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கும், துணை சபாநாயகர் பதவி என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரில் மூவர் பா.ஜ.,விற்கும், மற்ற மூவர் என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். அதேநேரத்தில் பா.ஜ., சார்பில் 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் சுழற்சி முறையில் தங்களுக்கும் அமைச்சர் பதவி மற்றும் வாரிய தலைவர் பதவி பெற்றுத் தர வேண்டி, கட்சி தலைமைக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தும் பலனளிக்கவில்லை.
அதிருப்தியடைந்த பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தனி அணியாகவும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாகவும் செயல்படத் துவங்கியுள்ளனர்.
இதனிடையே பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய பாதை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.
அதற்கு அச்சாரமாக கடந்த வாரம், தமிழக அரசியலில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வரும், பிரபல லாட்டரி அதிபரின் வாரிசான மார்ட்டின் தலைமையில், காமராஜ் நகர் தொகுதியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அந்த விழாவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரிச்சர்ட் பேசுகையில், காமராஜ் நகர் தொகுதி அதிர்ஷ்டமான தொகுதி. எனது நெல்லித்தோப்பு தொகுதியில் முன்பு எனது தந்தை ஜான்குமார் இருந்தார். அவர் இந்த தொகுதிக்கு வந்ததும், அதிர்ஷ்டம் காமராஜ் தொகுதிக்கு மாறியதாக கூறினர். தற்போது, அதைவிட பெரிய அதிர்ஷ்டமாக பெரும் ஜாம்பவான் மார்ட்டின் வந்துள்ளார். எனது தந்தை செய்ததை விட பலமடங்கு இந்த தொகுதிக்கு செய்வார்.
அந்த வகையில் காமராஜ் நகர் தொகுதி மிகவும் கொடுத்து வைத்தது என, மார்ட்டினின் அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தினார். அதனை பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆமோதித்தனர். விழா இறுதியில் பேட்டியளித்த மார்ட்டின், அரசியல் களம் இறங்குவது குறித்து நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார்.
இதனால் கலக்கமடைந்த பிரதான கட்சிகள், லாட்டரி அதிபர் மார்ட்டின் புதுச்சேரி வருகையை கடுமையாக விமர்சித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான அங்காளன், சிவசங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் பேட்டி அளித்தனர்
அதில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறுகையில், எம்.எல்.ஏ.,க்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம்.
எவ்வளவு நாட்களுக்கு தான் பழைய அம்பாசிட்டர் காரை, பட்டி பார்த்து பெயிண்ட் அடித்து ஓட்டுவது. புது காரை விடுவோம். நல்ல காரை கொண்டு வந்து அறிமுகப்படுத்துவோம். மக்களுக்கு நல்லது செய்யட்டும். யார் வேண்டாம் எனச் சொல்கிறார்கள்.
மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. மக்கள், எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அறிவுரை சொல்ல தேவை இல்லை. தேர்தலுக்கு வாருங்கள். வரும் 2026 சட்டசபை தேர்தலில் எங்களை எதிர்த்து நின்று முடிந்தால், ஜெயித்து பாருங்கள் என சவால் விட்டுள்ளார்.
இதன் மூலம், வரும் சட்டசபை தேர்தலில் மார்ட்டின் தலைமையில் தனி அணி களம் காண்பது உறுதி என்பதால், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி கரையை கடக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.