இரு வேளை சாப்பாட்டிற்கு ஆயிரம் ரூபாயா? ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அலறல்
இரு வேளை சாப்பாட்டிற்கு ஆயிரம் ரூபாயா? ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அலறல்
ADDED : ஏப் 12, 2026 05:53 AM
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் 1,099 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச் சாவடிகளில் தலா ஒரு தலைமை அலுவலர், மூன்று ஓட்டுப் பதிவு அலுவலர்கள், ஒரு பல்நோக்கு ஊழியர் மற்றும் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர் ஓட்டுப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு, ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வேனில் ஏற்றும் போதே தேர்தல் ஆணையம் வழங்கும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது.
அதில், தலைமை அலு வலருக்கு ரூ.3,500, ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை 1-க்கு ரூ.3,000, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 2 மற்றும் நிலை 3க்கு தலா ரூ.2,700ம், பல்நோக்கு ஊழியருக்கு ரூ.1,200 மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு ரூ.1,500 வழங்கப்பட்டது.
இந்த பணத்தில் காலை டிபன் (2 இட்லி, பூரி கிழங்கு, கேசரி), மதியம் கலவை (வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சப்பாத்தி) , சாதம் தொகுப்பு வழங்கியதற்காக ரூ.300 முதல் ரூ.400 வரை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், இரு தொகுதிகளில் மட்டும், ஓட்டுச் சாவடி பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தில் சாப்பாட்டிற்காக தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களிடம் தலா ஆயிரம் ரூபாயும், பல்நோக்கு ஊழியரிடம் ரூ.500 பிடித்தம் செய்துள்ளனர்.
பிற தொகுதிகளில் சாப்பாட்டிற்கு ரூ. 300 முதல் 400 பிடித்தம் செய்துள்ள நிலையில், இரு தொகுதிகளில் மட்டும் ரூ.1,000 பிடித்தம் செய்திருப்பது ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
