தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் 11 மனுக்கள் ஏற்பு: செப்., 19 ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் 11 மனுக்கள் ஏற்பு: செப்., 19 ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
UPDATED : செப் 17, 2026 06:13 PM
ADDED : செப் 17, 2026 06:12 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டு, 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடந்தது. இறுதி நாளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று வி.வி.பி., நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுப் பார்வையாளர் பாண்டா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வேட்பாளர்களும் அவர்களின் முகவர்களும் பங்கேற்றனர். காலை 11:00 மணிக்கு மனு பரிசீலனை துவங்கியது முதலே பரப்பரப்பாகவே நகர்ந்தது. ஒவ்வொரு வேட்பாளர்களாக அழைக்கப்பட்டு, அவர்களின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
நேரடி களத்தில் பிரதான கட்சிகள்:: காங்., வேட்பாளர் விநாயகம், என்.ஆர்.காங்., அசோக் ஆனந்த், இந்திய கம்யூ., சலீம், தி.மு.க., சேதுசெல்வம், நாம் தமிழர் கட்சி கார்த்திகுமாரி, இந்திய குடியரசு கட்சி கலைவாணன் ஆகியோருடன் சாமிநாதன், நித்தியா, ரகுநாதன், ஜெயபாலன், வசந்தி ஆகிய 5 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இடைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களில் 11 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை:: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தின் மனு பரிசீலனைக்கு வந்தபோது, கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. அவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், தனது உண்மையான வருமானத்தை மறைத்து பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக காங்., மற்றும் தி.மு.க., பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.
இந்த புகார்களுக்குப் பதிலளித்த தேர்தல் அதிகாரிகள், 'விதிமுறைகளின்படியே மனு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருப்பின் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்' எனக் கூறி, என்.ஆர்.காங்., வேட்பாளரின் மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
4 மனுக்கள் நிராகரிப்பு ஏன்?: பிரதான வேட்பாளர்களின் மனுக்கள் எந்தவித இடையூறின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதால், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் இயல்பாகவே தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்படி காங்., மாற்று வேட்பாளர் பூங்கோதை, என்.ஆர்.காங்., மாற்று வேட்பாளர் ஆனந்தன், தி.மு.க., மாற்று வேட்பாளர் முத்துராமன் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதேபோல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகுமாரி தாக்கல் செய்திருந்த இரு மனுக்களில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை 19ம் தேதி இறுதி நாள். நாளை மாலை 3:00 மணிக்குள் மனு வாபஸ் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. அன்றே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.
