/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாவற்குளத்தில் தார் சாலை அமைக்கும் பணியில் சொதப்பல்; சாலையோர பள்ளங்களை மூடாததால் விபத்து அபாயம்
/
நாவற்குளத்தில் தார் சாலை அமைக்கும் பணியில் சொதப்பல்; சாலையோர பள்ளங்களை மூடாததால் விபத்து அபாயம்
நாவற்குளத்தில் தார் சாலை அமைக்கும் பணியில் சொதப்பல்; சாலையோர பள்ளங்களை மூடாததால் விபத்து அபாயம்
நாவற்குளத்தில் தார் சாலை அமைக்கும் பணியில் சொதப்பல்; சாலையோர பள்ளங்களை மூடாததால் விபத்து அபாயம்
ADDED : மே 20, 2025 01:06 AM

வானுார் : நாவற்குளத்தில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலையில், இரு புறத்திலும் மண் நிரப்பி பள்ளங்களை சரியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பட்டானுார் வழியாக நாவற்குளத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இச்சாலையை புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
சாலை குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், தமிழக அரசின் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 86 லட்சம் செலவில், 1.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, சாலையில் கருங்கற்கள் கொட்டி பலப்படுத்தும் பணி நடக்கிறது. அடுத்த கட்டமாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த சாலை மீது அரை அடி அளவுக்கு ஜல்லி கொட்டி சாலையை மேடாக்கி அமைப்பதால், சாலையின் இரு பக்கத்திலும் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது.
சுற்றுவட்டாரத்தில் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை பெருகி விட்டது. அதற்கு ஏற்ப சாலையை அகலப்படுத்துவதற்கு பதில், ஏற்கனவே இருந்த 12 அடி அகலத்திலேயே தார் சாலை அமைக்கின்றனர். சாலை மேடாகி விட்டதால், சாலையின் இருபுறத்திலும் பள்ளம் உருவாகி, எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி வழிவிட்டு செல்வது சவாலாக மாறிவிட்டது.
சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மண் கொட்டி நிரப்பி வருகின்றனர். ஆனால், ரோலர்கள் பயன்படுத்தி சமன்படுத்தவில்லை. பெயரளவுக்கு மட்டுமே மண் கொட்டி நிரப்பி உள்ளனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கும்போது, மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாலை பணியை செய்வோர், அவசர அவசரமாக பணியை முடிக்க நினைக்கின்றனர். சாலையை மேடாக்கி அமைப்பதால், சாலையின் இருபக்கமும் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகி விட்டது.
இதனை சரி செய்ய ஒரு சில இடங்களில் மட்டும் கடமைக்காக மண் கொட்டி நிரப்பி உள்ளனர்.
சாலையோரம் வீடுகள், கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் பள்ளத்தின் மீது சரியாக மண் கொட்டி நிரப்பாமல் அப்படியே விட்டு விட்டனர்.
எனவே, தார் சாலை அமைப்பதற்கு முன்பாகவே, இருபக்கமும் சாலையோர பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினர்.