/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள்... அதிகரிப்பு; பெற்றோர் மீது கடும் நடவடிக்கை தேவை
/
சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள்... அதிகரிப்பு; பெற்றோர் மீது கடும் நடவடிக்கை தேவை
சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள்... அதிகரிப்பு; பெற்றோர் மீது கடும் நடவடிக்கை தேவை
சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள்... அதிகரிப்பு; பெற்றோர் மீது கடும் நடவடிக்கை தேவை
ADDED : ஜன 18, 2025 06:42 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி நகர பகுதியில் மளமளவென பெருகியுள்ள வணிக வளாகங்கள், கடைகள் காரணமாக சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியாது என அரசு தெரிவித்து விட்டது. பொது போக்குவரத்து (பஸ்கள்) அதிக அளவில் இல்லாதது, ஆட்டோக்களின் தாறுமாறான கட்டணம் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி பைக் பயன்படுத்துகின்றனர்.
இதனால் மாநிலத்தின் வாகன எண்ணிக்கை, குறிப்பாக பைக் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவாகி வருகிறது. அதற்கேற்ப விபத்துகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு 952 வழக்கு, 2021ம் ஆண்டு 1093 வழக்கு, 2022ம் ஆண்டு 1140 வழக்கு, 2023 ஆண்டு 1271, கடந்த 2024 ஆண்டு 1472 வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், சிறார்களால் ஏற்படும் விபத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பைக் சாகங்களை பார்க்கும் பள்ளி சிறார்கள் பைக் ஓட்ட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, 12 வயது முதல் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள், ஸ்கூட்டர், பைக்குகளை ஓட்ட அடம் பிடிக்கின்றனர். 18 வயது குறைவான சிறுவர்கள் பைக் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என தெரியாமல் பெற்றோர் பைக் கொடுத்து அனுப்புகின்றனர்.
பெருமை பேசுவது வழக்கமாகிவிட்டது:
முதலில் வீட்டை சுற்றி பைக் ஓட்டும் சிறார்கள், அடுத்த சில நாட்களில் நெடுஞ்சாலைகளில் வலம் வர துவங்கி விடுகின்றனர். இத்தகைய சிறார்களுக்கு போக்குவரத்து விதிகள் துளியும் தெரிவதில்லை. மனம்போன போக்கில் பைக்கில் சுற்றுவதும், சைகை காண்பிக்காமல் திரும்புவதால் பின்னால் வாகனத்தில் வரும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
விபத்து ஏற்படுத்தியது சிறார் என்றால், சுற்றியுள்ள பொதுமக்களும், போலீசாரும் கருணை மழை பொழிகின்றனர். சிறுவனின் படிப்பு வீணாகி விடும், வாழ்க்கை வீணாகிவிடும் என விபத்தை பெரிதுப்படுத்தாமல் சிறுவனை அனுப்பி விடுகின்றனர்.
சட்டம் சொல்வது என்ன?
18 வயதிற்கு குறைவான சிறார்கள் வாகனம் இயக்கி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199(ஏ) கீழ் சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது மோட்டார் வாகனத்தின் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 25,000 அபராதம்.
18 வயது சிறார் வாகனம் இயக்குவது, மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 r/w 181 கீழ் குற்றம். இதற்கு 3 மாத சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், 25 வயது வரை வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.
புதுச்சேரியில் சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டு மட்டும் 10 வழக்கு பதிவாகி உள்ளது. இதில் சிறார்களின் பெற்றோர் ஒருவர் கூட கைது செய்யவில்லை. பெற்றோர் கவனத்திற்கு தெரியாமல் பைக் எடுத்து சென்று விபத்து ஏற்படுத்தியதால் பெற்றோர் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்தில் சிறார்கள் ஓட்டிச் சென்ற பைக், அரியாங்குப்பம் சிக்னல் அருகே பஸ் மீது மோதியதில் 2 சிறார்கள் உயிரிழந்தனர். சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
எனவே, புதுச்சேரியில் சிறார்கள் வாகனம் ஓட்டினால், தயவு தாட்சன்யம் இன்றி போலீசார் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் தனது குழந்தைகளுக்கு பைக், ஸ்கூட்டர் கொடுத்து வெளியே அனுப்புவது முற்றிலுமாக தடுக்க முடியும்.
போக்குவரத்து மேற்கு, தெற்கு பகுதி எஸ்.பி., மோகன்குமார் கூறியதாவது;
அரியாங்குப்பத்தில் பைக் ஓட்டி வந்த 2 சிறார்கள் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், பெற்றோருக்கு தெரியாமல் பைக் எடுத்து சென்று விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. வாகன தணிக்கையின்போது சிறார்கள் பைக் ஓட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என்பதை பதிய வைக்க வேண்டும். குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது.
பெற்றோர் குழந்தைகளை கண்காணிப்பதன் மூலம் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும். பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள் மாணவர்கள் 18 வயதிற்கு குறைவானோர் வாகனம் ஓட்ட கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.