/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழை பாதிப்பை தவிர்க்க முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் திடீர் ஆய்வு
/
மழை பாதிப்பை தவிர்க்க முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் திடீர் ஆய்வு
மழை பாதிப்பை தவிர்க்க முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் திடீர் ஆய்வு
மழை பாதிப்பை தவிர்க்க முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் திடீர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 05:33 AM

புதுச்சேரி : வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் இரண்டாம் நாளாக நேற்று தொடர்ந்து மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலின் தெற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று விடியற்காலை 5:30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதை தொடர்ந்து மழை தீவிரமடைந்துள்ளது.
48 மி.மீ., மழை பதிவு
இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணிவரை 25 மி.மீ., அளவிற்கும், நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை 23 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலாண்மை கூட்டம்
இதனையடுத்து, மழை பாதிப்பை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்றுமுன்தினம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மீட்பு பணிக்கு துறை வாரியாக கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தவும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது. மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 90 பேர் மற்றும் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டனர்.
வானிலை ஆய்வு மைய மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன், நேற்று காலை லாஸ்பேட்டை, இ.சி.ஆரில்., அமைந்துள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கால உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.
அவரிடம், மீட்பு பணிக்கான மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே மற்றும் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் விளக்கினர். தொடர்ந்து, மீட்பு பணிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஆப்தா மித்ரா பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை சந்தித்து பேசினார்.
பின்னர், பருவமழையை முன்னிட்டு துார்வாரும் பணிகளை துரிதப்படுத்தவும், மழை நீரை வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்த கவர்னர் ஆலோசனை வழங்கினார்.
நேற்று காலை முதல் மழை சீராக பெய்த போதிலும், மழை நீர் எங்கும் தேங்கவில்லை. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், தொடர் மழை பெய்த போதிலும், ஆர்வ மிகுதியில் வழக்கம் போல் கடற்கரையில் குவிந்தனர். அவர்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுரை கூறி வெளியேற்றினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இரண்டாம் நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடித்தது மின்மாற்றி
கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபம் அருகே இருந்த மின்மாற்றி, மின் இணைப்பு பகுதியில் மழை நீர் தொடர்ந்து ஊற்றியதில், சரவெடி போல் தொடர்ந்து வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மின்துறை ஊழியர்கள் விரைந்து சென்ற, பழுதை சீரமைத்தனர்.