ADDED : ஜூன் 13, 2026 04:26 AM

புதுச்சேரி: இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில், 12வது சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
புதுச்சேரியில் 12வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த தொடர்புடைய செயல்பாட்டு துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள பயிலரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.
அரசு செயலர் (சுகாதாரம்) சவுத்திரி முகமது யாசின் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, பள்ளி கல்வித் துறை, உயர் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், செய்தி மற்றும் விளம்பரம், கலை பண்பாட்டு துறை, புதுச்சேரி நகராட்சி, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளைச் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 12வது சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரியில் நடைபெற உள்ள யோகா செயல் முறையில் கடந்த ஆண்டை விட அதிகமானவர்களை பங்கேற்க செய்வது. அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்வது. யோகா கலையின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது. கிராமப் பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
