/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சாலைகளில் டிராம் ரயில் சேவை துவங்க ஆலோசனை! முதல்வர் முன்னிலையில் விரைவில் செயல்விளக்கம்
/
புதுச்சேரி சாலைகளில் டிராம் ரயில் சேவை துவங்க ஆலோசனை! முதல்வர் முன்னிலையில் விரைவில் செயல்விளக்கம்
புதுச்சேரி சாலைகளில் டிராம் ரயில் சேவை துவங்க ஆலோசனை! முதல்வர் முன்னிலையில் விரைவில் செயல்விளக்கம்
புதுச்சேரி சாலைகளில் டிராம் ரயில் சேவை துவங்க ஆலோசனை! முதல்வர் முன்னிலையில் விரைவில் செயல்விளக்கம்
ADDED : ஜன 01, 2024 05:51 AM

புதுச்சேரி மாநிலத்தில், மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு கணக்குப்படி, 10.50 லட்சம் வாகனங்கள் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன், மக்கள் அடர்த்தியும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அத்துடன், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், அதை ஈடுகொடுக்க முடியாமல் புதுச்சேரி சாலைகள் திணறி வருகின்றன.எனவே, புதுச்சேரியில் சாலைகளில், பொதுபோக்குவரத்தினை அதிகரிக்கும் வகையில்,தண்டவாளத்தில் ஓடும் டிராம் வண்டிகளை இயக்குவது தொடர்பான சாத்திய கூறுகளை புதுச்சேரி அரசு ஆராய்ந்து வருகின்றது.
புதுச்சேரி சாலைகளில் நடுவில் டிராம் வண்டிகளை (டிராம் ரயில்)இயக்குவது தொடர்பாக, தனியார் நிறுவனம் ஒன்று செயல் திட்டத்தினை உருவாக்கி, புதுச்சேரி அரசையும் அணுகியுள்ளது. இத்திட்டம் குறித்து, முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் விரைவில் செயல் விளக்கம் காண்பித்து, ஒப்புதல் பெற திட்டமிடபட்டுள்ளது.
அதில், டிராம் வண்டிகளை காலாப்பட்டில் இருந்து இ.சி.ஆர்., வழியாக கோரிமேடு வரையிலும், அங்கிருந்து பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக இயக்கலாம் என்றும், அதற்கான சாத்திய கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சூழ்நிலையில், டிராம் வண்டிகள் இயக்கினால் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் கைகெடுக்கும் என்பதால், சுற்றுலா துறை மூலமாக டிராம் வண்டிகளை மூன்று அல்லது நான்கு பெட்டிகளுடன் துவக்கலாம் என்றும் அரசு ஆலோசித்து வருகின்றது.இருப்பினும், சாலை போக்குவரத்து பாதிக்காத வகையில் டிராம் ரயிலுக்கான தண்டவாளத்தை அமைப்பதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. பாக்கமுடையான்பட்டில் இருந்து ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல் வழியாக மேம்பாலம் 400 கோடி ரூபாயில் அமைய உள்ளது.
அப்படி இருக்கும் போது டிராம் வண்டிகளை தண்டவாளம் அமைத்து இயக்குவது சவாலாகவே இருக்கும். எனவே, மேம்பாலம் திட்டத்திலேயே டிராம் வண்டிகளின் தண்டவாள பாதையை முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிராம் வண்டி செயல் விளக்க கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிராம் டூ எலக்ட்ரிக் டிராம்:
டிராம் வண்டி சேவையில் இந்தியாவில் சென்னை தான் முன்னோடி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில், முதன் முதலில் 1877ம் ஆண்டு சிறிய தண்டவாளத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையிலான டிராம் ரயில்கள் இயக்கப்பட்டன. இதில்பயணிக்க சென்னை மக்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்தது.அடுத்து இந்த டிராம்களை நவீனப்படுத்த 1892ம் ஆண்டு மின்சார டிராம் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மெட்ராஸ் டிராம் வேல்ஸ் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் சென்னையில்தான் முதல் முதலில் ஓடியுள்ளது. லண்டன் நகரில்கூட அப்போது எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடவில்லை. சென்னையில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அமெரிக்காவில் ஓடியிருக்கிறது.
கடுமையான நஷ்டம் காரணமாக, அவர்களால் 1953ம் ஆண்டுக்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. இப்போது கொல்கத்தாவில் மட்டுமே டிராம்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.