/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 படுக்கையுடன் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனைக்கு... புரிந்துணர்வு ஒப்பந்தம்; 6 லட்சம் காப்பீட்டாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும்
/
100 படுக்கையுடன் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனைக்கு... புரிந்துணர்வு ஒப்பந்தம்; 6 லட்சம் காப்பீட்டாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும்
100 படுக்கையுடன் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனைக்கு... புரிந்துணர்வு ஒப்பந்தம்; 6 லட்சம் காப்பீட்டாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும்
100 படுக்கையுடன் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனைக்கு... புரிந்துணர்வு ஒப்பந்தம்; 6 லட்சம் காப்பீட்டாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும்
ADDED : மே 20, 2025 06:36 AM

புதுச்சேரி : ஆறு லட்சம் காப்பீட்டாளர்களை கொண்ட கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகருகின்றது. மாநில அரசிடமிருந்த இம்மருத்துவமனையை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய மாதிரி மருத்துவமனையாக அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரியில் 6 லட்சம் காப்பீடு செய்யப்பட்ட நபர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் இ.எஸ்.ஐ., பயனாளிகளாக உள்ளனர். யூனியன் பிரதேசத்தில் 15 இ.எஸ்.ஐ., மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை காப்பீடு செய்யப்பட்ட மக்களுக்கு முதன்மை மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன.
இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், இதுவரை புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தனர். சில சமயங்களில், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மேம்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டியிருந்தது.
இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் 15 மாதிரி மருத்துவமனைகளை நிறுவ, இ.எஸ்.ஐ., எனும் மத்திய அரசின் ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகம் முன்மொழிந்தது. மேலும், புதுச்சேரி அவற்றில் ஒரு இடமாகத் தேர்ந்தெடுத்து மாதிரி மருத்துவமனையை கட்ட முன் வந்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து, இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக விரிவான ஆலோசனைகள் நடந்து வந்தன.
தற்போது கோரிமேட்டில் புதுச்சேரி அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ.எஸ்., மருத்துவமனையை மேம்படுத்தி, மத்திய அரசின் ஊழியர் அரசு காப்பீட்டு நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இ.எஸ்.ஐ.சி., புதுச்சேரி பிராந்திய இயக்குநர் கிருஷ்ணகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழுவினரும் கையழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகாதார துறை அரசுச் செயலர் ஜெயந்த குமார் ரே, தொழிலாளர் துறை ஆணையர் ரெட்டி, இ.எஸ்.ஐ., மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாதிரி மருத்துவமனையில், தற்போது 75 படுக்கை வசதிகள் உள்ளது. புரிந்துணர்வு அமலுக்கு வந்ததும், மேம்பட்ட மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சேவைகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வசதி முதற்கட்டமாக ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து 200 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகவும் மாற்றப்பட உள்ளது.
இதனால் புதுச்சேரியில் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உயர்தர சுகாதார சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். குறிப்பாக, சிறப்பு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படது. இது புதுச்சேரியில் உள்ள இ.எஸ்.ஐ., பயனாளிகளுக்கான பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு பெரிய மைல்கல்லாகவும் அமையும்.