ADDED : ஆக 13, 2025 02:48 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், இரண்டு மாத எச்.ஐ.வி., எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் துவக்க விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
நாடு முழுதும் பொது மக்கள், இளைஞர்களுக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச இளைஞர் தினத்தைமுன்னிட்டு நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுசங்கங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார்.
முன்னதாக, கலைக்குழுவின் கூடிய பிரசார வாகனம் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வுஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் வரவேற்றார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் ஜெயந்த குமார் ரே ஆகியோர் வாழ்த்தி பேசினர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அருள் விசாகன் நன்றி கூறினார்.
சினிமா நடிகர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். சுகாதார இயக்கக இயக்குநர் கோவிந்தராஜ், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், பொது சுகாதார துணை இயக்குநர் ஷமிம், குடும்ப நல துணை இயக்குநர் அனந்தலட்சுமி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.