/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வழக்கம் போல் விமான சேவை
/
புதுச்சேரியில் வழக்கம் போல் விமான சேவை
ADDED : ஜன 25, 2024 04:46 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் நிர்வாக ரீதியாக அறிவிக்கப்பட்ட விமான சேவை நிறுத்தம் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், புதுச்சேரி - பெங்களூரு விமான சேவையை துவக்கியது.
சில மாதங்களில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் கடந்த 2015ல் துவங்கியது. போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், கடந்த 2017 ம் ஆண்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், புதுச்சேரி - ஹைதராபாத், பெங்களூரு இடையிலான விமான சேவையை துவக்கியது.
தினசரி மதியம் 12:25 மணிக்கு ஹைதராபாத்தில் புறப்படும் விமானம், மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி வருகிறது. இங்கிருந்து பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு 3:20 மணிக்கு பெங்களூரு செல்கிறது.
பெங்களூருவில் இருந்து மாலை 3:50 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. இங்கிருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம், 6:35 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது.
புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை பிப். 1ம் தேதி முதல் நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக நிர்வாக ரீதியாக விமான நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு விமான நிலையம் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு தெரிவித்தது.
அதையடுத்து, புதுச்சேரி விமான சேவை நிறுத்தம் என்ற நிர்வாக ரீதியிலான முடிவு வாபஸ் பெறப்பட்டு, பிப்., 1ம் தேதி முதல் வழக்கம்போல், பெங்களூர், ஹைதராபாத்திற்கு விமான சேவை இயங்கும் என புதுச்சேரி விமான நிலையத்திற்கும், விமான நிறுவன ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பட்டுள்ளது.