/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆலங்குப்பம் கிராமத்திற்கு புறக்காவல் நிலையம் தேவை
/
ஆலங்குப்பம் கிராமத்திற்கு புறக்காவல் நிலையம் தேவை
ADDED : ஏப் 01, 2025 04:14 AM
புதுச்சேரி: ஆலங்குப்பம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காலாப்பட்டு தொகுதியில் ஆலங்குப்பம், சஞ்சீவிநகர், புதுநகர், அன்னை நகர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியை ஒட்டி இருப்பதால் ஆலங்குப்பம், சஞ்சீவிநகர் பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் இரு கிராமங்களும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், ஆலங்குப்பத்தில் மூன்று மதுபானக்கடைகள் உருவாகி விட்டது.
இங்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள தமிழக பகுதியில் இருந்து மது பிரியர்களும் படையெடுத்து வருகின்றனர். கஞ்சா புழக்கமும் அதிகரித்து வருகிறது.. 'போதை ஆசாமி'களால் சட்ட ஒழுங்கு பிரச்னை தலை துாக்கி வருகிறது.
இதுபோன்று பிரச்னைகள் ஏற்படும் போது, உடனுக்குடன் போலீசார் வருவதற்கு, இந்த பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.
அப்படியே பாதிக்கப்படும் நபர்கள், புகார் அளிக்க வேண்டும் என்றால், 10 கி.மீ., கடந்து புதுச்சேரி எல்லையில் உள்ள தன்வந்தரி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும்.
பிரச்னைக்குரிய இடத்திற்கு போலீசார் வருவதற்குள், சாதாரண வாய் தகராறு கூட அடிதடி, கொலை முயற்சிகளில் முடிவடைந்து விடுகிறது. பார் அமைந்துள்ள பகுதியில் பிரச்னைகள் நடக்காத நாட்களே கிடையாது.
ஏற்கனவே ஆலங்குப்பம் கிராமத்திற்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரமும் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதுவரை புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான சுவடே இல்லாத நிலை உள்ளது. எனவே பொது மக்களின் சிரமங்களை தவிர்க்க ஆலங்குப்பம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.