/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாநிலம் முழுவதும்... ரீ-சர்வே; நில அளவை துறை அதிரடி திட்டம்
/
புதுச்சேரி மாநிலம் முழுவதும்... ரீ-சர்வே; நில அளவை துறை அதிரடி திட்டம்
புதுச்சேரி மாநிலம் முழுவதும்... ரீ-சர்வே; நில அளவை துறை அதிரடி திட்டம்
புதுச்சேரி மாநிலம் முழுவதும்... ரீ-சர்வே; நில அளவை துறை அதிரடி திட்டம்
ADDED : அக் 23, 2024 04:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முழுமையான ரீசர்வே செய்ய, கவர்னர் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களும் பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்திலேயே நேர்த்தியாக திட்டமிட்டு கட்டப்பட்ட அழகிய நகரம். புதுச்சேரி இணைந்த பிறகு புதிய சர்வே சட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதன் பிறகு 1972ல் மாநிலம் முழுவதும், முழுமையான நில அளவைக்காக சர்வே பணி துவங்கியது. பல்வேறு கட்டங்களாக நடந்த இப்பணி ஒருவழியாக கடந்த 1979ல் நிறைவடைந்தது.
அந்த ரீசர்வே தான், இன்றைக்கு எல்லைச் சாமிகளாக உள்ளன. இவை, எப்.எம்.பி., எனப்படும் புலப்பட நகலை, எல்லைகளாக கொண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முழுமையாக நவீன தொழில்நுட்ப முறையில் ரீசர்வே செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 1967ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசின் சர்வே மற்றும் நில எல்லை சட்டத்தில் நவீன தொழில் நுட்பத்தின்படி சர்வே செய்ய புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நவீன சர்வே, புதுச்சேரி, உழவர்கரை, வில்லியனுார், பாகூர், காரைக்கால், திருநள்ளார் உள்ளிட்ட தாலுக்காவிலும், மாகி, ஏனாம் உள்ளிட்ட சப் தாலுக்காவிலும் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கவர்னரின் ஒப்புதலின்படி நிலஅளவை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தை பொருத்தவரை மொத்தம் 490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புதுச்சேரி -294, காரைக்கால்-157, மாகி-9, ஏனாம்-30 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளன. இந்த பரப்பளவு முழுவதும் 'ட்ரோன்கள்' மூலம் அளவீடு செய்யப்பட உள்ளது. அதன் பிறகு மாநிலம் முழுவதும் 129 வருவாய் கிராமங்களும் 'ட்ரோன் மேப்பிங்' மூலம் வரையறை செய்யப்பட உள்ளன.
மிகவும் துல்லியம்
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள இந்த 'ட்ரோன் மேப்பிங்' என்பது ஒரு பெரிய நிலத்தின் மீது சீரான இடைவெளியில் புகைப்படம் எடுக்கும் கலையாகும். ஆயிரக்கணக்கான புகைப்படங்களைக் கிளிக் செய்த பிறகு, அனைத்து புகைப்படங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, 'ஆர்த்தோமோசைக்' அல்லது 2டி வரைபடம் எனப்படும் ஒற்றைப் படத்தை உருவாக்கப்படும்.
'ட்ரோன்' வரைபடத்தின் துல்லியத்தை அதிகரிக்க, டி.ஜி.பி.எஸ்., புள்ளிகள் சீரான இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. அந்த டி.ஜி.பி.எஸ்., புள்ளிகள் 'ஆர்த்தோ' வரைபடத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நில வரைபடம் மிகவும் துல்லியமாகவே இருக்கும்.
'ட்ரோன் மேப்பிங்' மூலம் கைப்பற்றப்பட்ட தரவு, பொறியாளர்கள் தரையில் இருந்து பார்க்கக்கூடியதை முழுமையாக பூர்த்தி செய்யும். இத்திட்டத்தால் புதுச்சேரியின் ஒவ்வொரு இடத்தினையும் அட்சரேகை, தீர்க்கரேகையுடன் துல்லியாக தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது.

